பேருந்து நிறுத்ததில் நின்று கொண்டிருந்த தனது கல்லூரிதோழியை, குடிபோதையில் லாரி ஓட்டியவனால் கொல்லபட்ட சோக நிகழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருந்தார். எனக்கு மிகவும் கவலையளித்தது. ஆர்வ மிகுதியால் நட்பா,அல்லது காதல் என்ற உறவா என வினைவினேன். அது நட்பையும் கடந்தது ஆனால் காதல் அல்ல என்றார். உண்மையில் இந்த விதமான உறவு நம் வாழ்க்கையும் கடந்து செல்வது உண்டு. நெருக்கமான நட்பு, தன்னலமற்ற அன்பு ,காமமற்ற அன்பு என கூறி கொண்டே போகலாம். இவ்விதமான நட்பு பற்றி எண்ணி கொண்டிருக்கையில் எனது மனம் சர்ர்ர்ர்…. என 30 வருடத்தை பின்னோக்கி சென்றது.
சபீர் என்ற எனது தோழன் என்னுடன் டுயூஷனில் படித்தான். அவனும் நானும் போட்டி போட்டு படிப்போம். அவன் கணக்கு பாடத்தில் திணறி படித்தான். நான் பல முறை வீட்டு பாடம் முடிக்க உதவியுள்ளேன். அவனுக்கு என தீன் பண்டங்கள் எடுத்து சென்றுள்ளேன். அவனுக்கு அன்று கவலை என்றால் எனக்கு அந்த நாள் மகிழ்ச்சியாக இருக்காது. அவன் ஒரு நாள் வரவில்லை என்றால் வீட்டுக்கு போய் அவன் அம்மாவிடம் கேட்காது மனம் அமைதி கொள்ளாது. விடுமுறை நாட்களில் அவனை பார்க்க அவனுடைய வீட்டுக்கு சென்று வருவோம். அவனுடைய அப்பா கண் சிவப்பாக கோழிமுட்டை மாதிரி இருக்கும். சிரிக்கவோ,முறைக்கவோ மாட்டார். அவர் எங்கள் பகுதியிலுள்ள பெரும் தொழில் அதிபராக இருந்தார்.
பள்ளியில் யாராவது அடித்துவிட்டால் அவனுடைய தோழர்களிடம் சொன்னால் என் எதிராளிகளை கவனித்து விடுவார்கள். அம்மா என்னை 4 வயதில் டுயூஷன் அனுப்பி விட்டார்கள்.அப்போழுது எங்கள் ஊரில் பாலவாடி அல்லது ஆங்கில L.K.G,U.K.G வகுப்புக்கள் இருந்ததில்லை. கிளாடிஸ் டீச்சர் வீடு தான் எங்கள் பள்ளி!எங்கள் கிளாடிஸ் டீச்சர் அழகாக இருந்தார். ஆனால் அவர் வாழ்கை ஒரு போராட்டமே என அவருடைய முகம் சொல்லி கொண்டிருந்தது.
டீச்சரின் கணவர் காச நோயால் பாதிக்க பட்டிருந்தார். மகனும் முரடணாக இருந்தான். டீச்சரின் வீட்டில் விறகு அடுப்பு என்பதால் விறகு சரியில்லை என்றால் நாங்கள் புகை மூட்டத்திற்க்குள் தான் இருக்க வேண்டும். டீச்சரின் மகள் தனக்கு இருக்கும் காட்டத்தை கடுகு தாளிக்கும் போது வெளிப்படுத்துவார். ஒருவர் ஒருவராக நாங்கள் இரும ஆரம்பிப்போம். அது போகப் போக ஒரு பொழுது போக்காகவே மாறியது. டீச்சர் மகள் எப்போழுது கடுகு தாளிப்பார் என காத்திருக்க தொடங்கினோம் தும்முவதற்க்காய்! டீச்சரின் அம்மா சற்று மனநலம் பாதிக்க பட்டிருந்தார். அவருடைய வேலையெல்லாம் கோழியையும் குஞ்சுக்களையும் பராமரிப்பதே. அம்மா கோழிகளுடன் குஞ்சு கோழிகள் செல்வதே பார்த்து கொண்டு இருப்பது என் பொழுது போக்காக இருந்தது.
டீச்சருக்கு மூன்று தங்கைகள் இருந்தனர் ஒருவர் அப்போழுதுதான் திருமணம் ஆகியிருந்தார். இளைய தங்கை துணி தைத்து கொண்டே இருப்பார். யாரிடமும் அவ்வளவு பேசுவதை பார்த்ததே இல்லை. அவர் எப்போழுதாவது கடைக்கு செல்வார். அவர் சேலை கட்டி முடிக்க ஒரு மணிநேரத்திற்க்கு மேல் எடுத்து கொள்வார். குட்டி-கூறா பவுடர் இடுவது தான் புல் ஸ்டாப் வைத்தது மாதிரி மேக்கப் முடித்து விட்டார், இனி விடைபெற போகின்றார் என்ற குறியீடாக இருந்தது. மேலும் பவுடர் மணம் இதமான மணமுள்ள காற்றை தந்தது எங்களுக்கு.
ரீச்சருக்கு 3 சகோதரர்கள் உண்டு . ஒருவர் பள்ளி ஆசிரியர் பயிற்ச்சி பெற்றுகொண்டிருந்தார் நான் அவரிடம் சேட்டை செய்தேன் என்று நிறைய அடி வாங்கியுள்ளேன். இனி ஒரு சகோதரர் வீட்டுகுள் காலடி வைத்தவுடனே அவர்கள் வீட்டில் மகாபாரத போர் ஆரம்பித்து விடும் . சட்டி பானை எல்லாம் எடுத்து எறிவது உடைப்பது போன்ற சத்தம் கேட்கலாம் . முதல் சகோதரர் ஒரு வாகன ஓட்டியாக இருந்துள்ளார். விபத்தில் சிக்கி நடு முதுகு தண்டவடம் ஒடிந்து படுக்கையில் இருந்தார். அவர் தான் அங்கு அரசர் மாதிரி. தண்ணீர் , சாப்பாடு என அவரை நல் முறையில் கவனித்து கொள்வார்கள். அவரிடம் அவர்கள் வீட்டில் அனைவரும் நடுங்கி நிற்பார்கள். சிலவேளைகளில் அக்குடும்ப சண்டையின் தீர்ப்பு வழங்கி கொண்டிருப்பார், சில வேளைகளில் அவர் நண்பர்களுடன் அரசியல் கதைத்து கொண்டிருப்பார். அவருடைய சத்தம் மட்டுமே எங்களுக்கு பரிசயமாக இருந்தது, கிட்ட போய் பார்ப்பது கிடையாது. அவருடைய உருவம் சத்தம் எல்லாம் எனக்கு ஒரு வித பயத்தை கொடுத்துள்ளது.
எனது குழந்தை பருவத்தில் , அதிக நேரம் எனது வீட்டைவிட அங்கு இருந்தது போல் தான் உணருகின்றேன் .எனது வீட்டில் எனது சகோதரனும் சகோதரியும் சிறு பிள்ளைகளாய் இருந்ததால் எனக்கு கிடைக்க வேண்டிய நிறைய சலுகைகள் மறுதலிக்க பட்டது. பல வேளைகளில் விட்டு கொடுக்கும் சூழலுக்கும் தள்ள பட்டேன். ஆகையால் டுயூஷன் வீட்டில் நான் செல்ல பிள்ளையாகவே வளர்ந்தேன். அங்கு காலை தமிழும், மதியானத்திற்க்கு மேல் மலையாள மொழியும் கற்பிக்க பட்டேன். பின்பு முதல் வகுப்புக்கு சேர்த்த போது அம்மா, தாய் வழி கல்வி என்ற நோக்குடன் தமிழ் வகுப்பில் சேர்த்து விட்டார்கள். எங்கள் ஆசிரியை ‘குழந்தை டீச்சர்'(பெயர்). முகம் எப்போழுதும் போர்களத்தில் நிற்ப்பது போன்றே இருக்கும். மேலும் தமிழ் ஆசிரியர்கள் , வித விதமாக அடித்தார்கள்.சிலர் கை மொளியில் அடிப்பின் , சிலரோ தொடையில் கிள்ளுவர், சிலர் கட்டிபிடித்து கவுகூட்டு பக்கம் தேடி நுள்ளி வைப்பர். இலங்கயில் தமிழ் மக்களுக்கு ஆர்மிகாரர்கள் தெரிந்தது போலவே எனக்கு தமிழ் ஆசிரியர்கள் தோன்றினர். மேலும் எனது தோழன் சபீர்,பமீஜா,போன்றவர்கள் மலையாளம் வகுப்பில் இருந்ததால், அம்மாவிடம் சண்டை பிடித்து மலையாளம் வகுப்பில் சேர்ந்து கொண்டேன். அஸீஸ் சார்,அயிஷா பீபி டீச்சர் எனக்கு ரொம்ப பிடித்திருந்தனர். பேபி டீச்சருக்கு நான் மலையாளம் பள்ளிக்கு செல்வதில் துளியும் விருப்பம் இல்லை.
நானும் அவனுடைய வகுப்பில் கிட்ட கிட்ட உட்கார்ந்து கொள்வோம். எங்கள் நட்பு நன்றாக சென்றது. அவனுடைய கூட்டாளிகள் அப்பாஸ், ராஜன், ஜெயன் போன்றோர் எனக்கும் கூட்டாளிகள் ஆகினர். அதில் ராஜன் 2 வகுப்பு படிக்கும் போது வேறு பள்ளிக்கு சென்று விட்டான் இருந்தாலும் கடிதம் எழுதி கொள்வோம். ஒரு முறை அவனுடைய அப்பாவுடன் எங்கள் வீட்டிற்க்கு என்னை பார்ப்பதற்கு என வந்திருந்ருந்தான் . பின்பு அவனை கண்டதே இல்லை. பிந்து,மோன்சி,ஜெயா, ரம்லது, ரஷீதா, லதா,போன்றவர்கள் வகுப்பு தோழிகள் ஆகினர். சவுதாம்மா என்ற ஒருத்தி எங்கள் வகுப்பில் இருந்தாள் அவள் என்னை அடிப்பாள்.அவளுடைய முகம் அம்மை வந்த தழும்புக்களால் பார்க்க கொஞ்சம் பயமாக இருந்தது. இவளை சரிகட்ட ஜெயாவின் உதவி தேவை பட்டது. ஒரு முறை சவுதாவை ஜெயா விரட்டி விரட்டி எனக்காக அடித்து விட்டாள். பின்பு என்னை பார்த்தால் பயந்து ஒதுங்கி சென்று கொண்டிருந்தாள் அதன் பின் நாங்கள் உற்ற தோழிகள் ஆகினோம். (ஜெயா தனது 21 வது வயதில் தன் மூன்று சகோதரிகளுடன் சேர்ந்து குளத்தில் தாவி தற்கொலை செய்து கொண்டாள்.)
வெள்ளி கிழமைகளில் எங்களுக்கு மதியம் மாணவர் கூட்டமைப்பு சம்மேளனம் நடக்கும். மாணவர்களே சேர்ந்து பாட்டு ,நடனம், பேச்சு என தொகுத்து வழங்குவோம்.எல்லோரிடம் காசு சேர்த்து; மிட்டாய்,சந்தனம் வாங்கி பகிர்ந்து அளித்து வெள்ளி கிழமை என்பது எங்களுக்கு பெரும் விழா போன்றே இருக்கும். எங்கள் பகுதியில் கிடைக்கும் உண்ணி பூக்கள் கொண்டு மேசையை அலங்கரிப்போம்.
4 வது வகுப்பு வந்த போது ஆண்,பெண் என்ற பெரும் சண்டையில் உடைந்தது சபீறுடன் ஆன எனது தோழமையுமே. அவனுடன் பேசினால் எங்கள் பெண்கள் சங்கத்தை அவமதித்தது போன்று ஆகி விடும் என்பதால் அவனை பார்த்தால் பேசுவதே இல்லை, 5-ம் வகுப்புக்கு பின்பு இரு பாலருக்கும் தனி தனி வகுப்பறை என்பதால் அவனை பார்க்கும் சூழலே அற்று போனது. 7 ம் வகுப்பு வந்த போது பள்ளி மாணவர் தலைவர் பதவிக்கு அவனுடைய வாக்கு எனக்கு கேட்டிருந்தேன். பின்பு 10 வகுப்பு வந்த போது ஒரே வகுப்பில் டியூஷனில் கற்றோம். சிறு சிரிப்பை தவிர பேசி கொள்ளும் வாய்ப்பை உருவாக்கவே இல்லை. எங்கள் தோழமை அவன் மனதிலும் மாறாது இருந்துள்ளது என பின்பு அறிந்தேன் இன்னொரு பள்ளி நண்பன் வழியாக.
நான் மேற் கல்வி என வேறு பிரதேசம் சென்ற போது அவன் வியாபாரத்தில் வந்து விட்டான் அவனது தந்தையை போன்று.
திருமணத்திற்க்கு பின்பு எனது கணவருடன் அவன் கடைக்கு சென்ற போது கதைத்திருந்தேன். அவனுக்கு 3 குழந்தைகள் உள்ளதாக கூறினான். அவனுடைய குழந்தைகள், மனைவியை காண என்னை அழைப்பான் என விரும்பினேன் ஆனால் அவனுடைய மன நிலை எவ்வாறாக இருந்தது என தெரியவில்லை. ஆகினும் நட்பு, அதையும் தாண்டி புனிதமான அன்பு அழியாதது என்று மட்டும் என் மனம் சொல்லியது!