18 Jan 2011

கல்லறைகளும் கதைக்கின்றது…………….



 
மரணம் என்பது பிறந்தால் வரும் என்பதால் அதை பற்றி ஒரு போதும் பயம் தோன்றியது கிடையாது. ஆனால் மனிதன் அழுகி புழுவாக மாறி கடைசியில் எலும்பு கூடு ஆவதை நினைத்தே பயம் வருகின்றது. இப்போது கூட அந்த பயம் இல்லாதில்லை. எலும்பு கூடுகளை பல ஆராய்ச்சி கூடங்களில் அந்தரங்கத்தில் தொங்கவிட்டிருப்பார்கள். கண்ணாடியில் ஒவ்வொரு முறை முகத்தை காணும் போது எலும்புகூடு முகம் பயம் முறுத்துகின்றது! வாழ்க்கைக்கு பல அர்த்தங்களை தருகின்றது! 

என்னவரிடம் ஒரு முறை விளையாட்டாக என்பது போல் உண்மையாகவே சொன்னேன் "ஹிந்து சகோதரர்கள் இறந்தால் எரித்து சாம்பலாக்கி கடலில் நதியில் கரைக்கும் முறை எனக்கு ரொம்ப பிடிக்கும்" என. அவருக்கு கோபமே வந்து விட்டது. ஏன் சாவை பற்றி பேசி கொண்டிருக்கின்றாய் என அடிக்கவே வந்துவிட்டார். ஆனால் ஒரு முறை இறந்த மனிதனை எரிக்கும் போது அவ்வழி கடக்க நேரிட்டபோது அதன் புகை நெடி கொடியதாக தான் இருந்தது , மேலும் ஒரு வித பயத்தை கொடுத்தது. நதிக்கரைகள் மாசுபடவும் காரணமாகின்றதே என்ற கவலையும் இல்லாதில்லை. மயானங்களில் எரிக்கும் பிணங்கள் எழாதிருக்க கம்பு வைத்து அடிப்பதாக கேள்வி பட்டுள்ளேன். பிரதமர் நேருவை எரித்த போது கூட அவருடைய எலும்பு எழுந்ததாக கதைகள் உண்டு. மின் மயானங்கள் உள்ளதால் நகர்புறங்களிள் வசிக்கும் நபர்களுக்கு இறந்த பின்பும் அடி வாங்கும் கவலை இல்லை! (நொடியில் பொடியாக வந்து விடுவார்களாம்)

நாங்கள் முதல் நிலை பள்ளியில் படிக்கும் போது இஸ்லாமியர்கள் இறந்தவர்களை புதைக்க எங்கள் பள்ளி அருகிலுள்ள வழியில் கொண்டு செல்லும் காட்சியை கண்டுள்ளோம். ஒரு பெரிய பெட்டியில் பச்சை துணியை கொண்டு மூடி " இலாஹிலாஹா இல் அல்லா" என்று பாடிகொண்டே செல்வது மரணத்துக்கு ரொம்ப கனம் உள்ளதாக தோன்றியுள்ளது. 

ஹிந்துக்கள் மரண வீடு தான் பயங்கரமாக இருக்கும். அழாவிட்டால் இறந்தவர்கள் ஆத்மா சாந்தியாகாது என்பதால் அழுவதை ஒரு சடங்காக வைத்து நடத்துவார்கள். பெரியகுளம் கல்லூரியில் படிக்கும் போது ஒலிபெருக்கி வழியே அழும் ஒப்பாரி பாடல்களில் அர்த்தமுள்ள ரசனையான வரிகள் மற்றும் நல்ல ராகம் உள்ளதையும் காணலாம். 

நான் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்த போது மரணத்தை கொண்டாடும் ஒரு பொடியன் இருந்தான். அவனை, அவனுடைய பெற்றோர் சிறு வயதில் கேரளாவில் வீட்டு வேலைக்கு அனுப்பியுள்ளார்கள். சில மோசமான நபர்களால் பாதிப்படைந்ததால் சிந்தனை செயல் ஒத்துபோகல் குறைவுள்ளவனாக இருந்தான். அவன் முகம் குழந்தை போல் இருந்தாலும் மயக்கு மருந்து போன்றவற்றின் பயன்பாட்டால் களையற்றே காணப்பட்டான். ஆனால் யாராவது இறந்து விட்டால் அடுத்த சில நாட்கள் மிகவும் உற்சாகமாக சிரித்தமுகத்துடன் காணப்படுவான். ஆடி பாடி இடுகாட்டுக்கு கொண்டு செல்வதை ரொம்ப அழகாக கதைப்பான். மரணத்தை பற்றி நினையும் போது அவன் நினைவுகளும் வந்து செல்வதுண்டு. 

நம்பிக்கை "கடவுள் தந்தார் கடவுள் எடுத்து கொண்டார்" என்ற கிறிஸ்தவ கோட்பாடு உள்ளதால் மரண வீட்டில் அழுகையை யாரும் வரவேற்பதில்லை, இருப்பினும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் இறந்த வீட்டில் சட்டத்தையும் மீறி அழுவதை காணலாம். பொதுவாக கிருஸ்தவ மரண வீடுகள், பிரத்தியேக மரண பக்தி பாடல்கள், ஜெபம் பின்புலனில் அன்று பயணிக்கும். வசதி வாய்ப்புள்ளவர்கள், படித்தவர்கள் வீட்டில் சிறிய சத்ததில் ஒலி நாடாவால் பாடலை ஒலிக்க விட்டிருப்பார்கள். ஆலய பாடல் குழுகூட அங்கு குழுமியிருந்து சோக பாடல்கள் பாடி கொண்டிருப்பார்கள்..
கன்னியாஸ்திரிகள் இறந்தால் அடக்கம் செய்யும் வரை பக்கத்தில் எரியும் மொழுகுவத்தி, கமகம எரியும் பத்தியுடன் பிரார்த்தனைகள் தச்சுக்கு என்பது ஒலித்து கொண்டே இருக்கும். இறந்த பின்பு ஆத்துமா 8 மணி நேரம் உணர்வுடன் இருக்கும் என்ற எண்ணம் இருப்பதால் இறந்தவர்களை மகிழ்வுடன் வழியனுப்பும் வழிதான்!
கேரளாவில் மரண வீட்டையும் விசேஷ வீடு போன்று வீடியோவில் பதிவு செய்வார்கள். பின்பு அதை எந்த மன நிலையில் பார்பார்கள் என்று தான் தெரியவில்லை. ஒரு வேளை பல குடும்பங்களில் வெளி நாடுகளில் உறவினர்கள் உள்ளதால் அனுப்பி கொடுக்க எடுக்கபடலாம்!
கேரளா ஹிந்து மக்கள் அவர்கள் வீட்டு வளாகத்திலுள்ள தோட்டத்தில் புதைக்கபடுவதையே பெருமையாக கருதுகின்றனர். மலையாளம்
நடிகர் முரளி
தன் கடைசி துகில் கொள்ள என அழகான அமைதியான இடம் தேர்வு செய்து வாங்கி வாழை, தென்னை நட்டு பராமரித்ததாகவும் அங்கே அவரை தகனம் செய்ததாகவும் ஊடகம் வழி நேரடி ஒளிபரப்பு செய்திருந்தனர். ஆனால் தமிழர்கள் புதைப்பதற்கென மரண பயம் பற்றி கொள்ளும் இடு காடுகள் தான் தேடுகின்றனர்.
பொதுவாக கிறிஸ்தவர்கள் இறந்தால் அடக்கம் பண்ண படுவது ஆலய வளாகத்திலுள்ள கல்லறை தோட்டத்தில் தான். கோவாவிலுள்ள கல்லறை தோட்டத்தின் அழகை கண்ட போது ஒருவருக்கு சாகுவதற்க்கு ஆசையாக இருந்ததாம். ஆனால் திருநெல்வேலி கல்லறை தோட்டத்தை காணும் போது சாகவே பயமாக உள்ளது! ஆலயவளாகத்தில் அல்லாது ஒதுக்குப்புறமாக களையற்று காணப்படுகின்றது.கிறிஸ்தவர்களுக்கு கல்லறை திருநாள் என்ற ஒரு நாள் உண்டு. கத்தோலிக்க சபையாருக்கு ஒரு சில மனிதர்கள், மரித்தவுடன் நேராக சொர்கமோ நரகமோ செல்வதில்லை என்றும் இடைபட்ட உத்திரிகிறிஸ்துஸ்தலம் என்ற இடத்தில் சென்றடையுவதாகவும் இவர்கள் சுத்திகரிக்கபட்ட (ஜெபத்தால்) பின்பே சொர்கம் சேருவதாகவும் ஒரு நம்பிக்கை இருப்பதால் வருடத்திற்க்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மரித்தவர்களை நினைத்து பிரார்த்தனை செலுத்துவது உண்டு. மேலும் உறவுகளுடன் உள்ள அன்பை வெளிப்படுத்தவும் இந்நாளை பயன்படுத்துவர். காடு பிடித்து கிடக்கும் கல்லறை மாடங்களில் செடி கொடிகளை வெட்டி வெள்ளையடித்து மெழுகு வத்தி பத்தவைத்து அழுத கண்களுடன் உருகி பிரார்த்தனை செய்வதை கண்டுள்ளேன்.
எனது அம்மாவின் தகப்பனார் மரிய செபாஸ்டியன் அவருடைய 31 வது வயதில் இருதய கோளாரால் திடிர் என இறந்து விட்டார். மயானத்திற்க்கு பெண்கள் செல்லாதிருப்பதால் பாட்டிக்கு எங்கு அடக்கம் செய்தனர் என தெரிந்திருக்க வில்லை. மேலும் பாட்டியின் திருமணம் காதல் திருமணம் என்பதால் தாத்தாவின் மரணம் அவருடைய குடும்பத்தாருக்கு பெரிய சம்பவமாக இருக்க வில்லை போலும். பாட்டி 16 வது நாளில் சென்ற போது பக்கத்தில் இன்னொரு கல்லைறையும் இருந்துள்ளது. பின்பு தாத்தாவின் உண்மையான குழி மாடம் ஏது என்பது பாட்டிக்கு தெரியாதே போய் விட்டது. அப்படி தாத்தாவுக்கு சொத்தில் மட்டுமல்ல கடைசியில் துகில் கொள்ளும் கல்லறை கூட சொந்தம் இல்லாதாகி விட்டது!
மலையாளத்து சகோதரர்கள் அவர்கள் முன்னோரை நினைத்து, அவர்கள் உயிரோடு இருக்கும் போது விரும்பி உண்ணும் உணவே நண்பர்களுக்கும் உறவுகாரர்களுக்கும் விருந்தாக தருவார்கள். ஆப்பம்- தாறா(வாத்து)கறி, பொரோட்டா- மாட்டு கறி குழம்பு ருசியாக சாப்பிட்டுள்ளோம். எனது அம்மா அவர்கள் பெரியப்பாவை எண்ணி ஒரு கைலி(லுங்கி), சட்டை, துண்டு, ஆட்டு கொழம்புடன் ஒருவருக்கு ஒரு நேர சாப்பாடு கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்..

 
1000 திற்க்கு மேற்பட்ட ஜனங்கள் உள்ள ஆலயமாக இருந்தும் எங்களுடைய வண்டிபெரியார் ஆலயத்தில் ஒரு அழகான ஆனால் மிக சிறிய கல்லறை தோட்டமே உள்ளது. கோயிலோடு சேர்ந்த காப்பி தோட்டத்தை பயன் படுத்த கூறியும் பாதிரியார்கள் செவி கொள்ளாது, மழை நேரம் அடித்தோடும் தண்ணிரில் எலும்புகளை குப்பை போன்று தள்ளி விட்டனர் என கூறி கொஞ்சம் மக்கள் வேறு சபை ஆலயம் தேடி சென்று விட்டனர். அதே போல் குழியில் இடம் இல்லாத போது மக்காத உடல்களை கல்லறை பக்கத்திலுள்ள ஒரு பெட்டி போன்ற சிமன்று தொட்டியில் இடுவதாகவும் சொல்லப்படுவது உண்டு. இதை துப்பு எடுக்க 'ஜெயிம்ஸ் பாண்டு 007' எங்கள் ஊரில் இன்னும் பிறக்காததால் தப்பி பிழைத்து போகின்றனர் எங்கள் ஆலய அதிகாரிகள்! கிறிஸ்தவர்கள் தாங்கள் கடைசி துயில் கொள்ளும் அவர்களுக்கு என 6 அடி சொந்த மண்ணுக்கு ஆயுசுக்கு பணம் செலுத்த வேண்டும் அல்லது செத்த பிறகும் உறவினர்கள் பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்த இயலாத மக்கள் பாடு தான் அடித்து செல்லும் தண்ணீரும் சிமன்று பெட்டியுமாக இருக்கலாம்!
குதிரைக்கு கடிவான் என்பது போல் சபையின் மக்கள் மேலுள்ள ஒரு கடிவானமும் கல்லறை தோட்டம் தான். சில கிறுஸ்தவர்கள் கல்லறைக்காகவே கோயிலுக்கு வருடத்திற்க்கு ஒரு முறையாவது சென்று காணிக்கை கொடுத்து வருவார்கள். ரொம்ப கேள்வி கேட்கும், மாற்று கருத்துள்ள, தற்கொலை செய்து கொள்ளும் கிருஸ்தவர்களுக்கு என தெம்மாடி குழியும் (கெட்டவர்கள் குழிமாடம்) உண்டு. கம்னிஸ்டுகள் மற்றும் சில முற்போக்கு கிருஸ்தவர்களின் எதிர்ப்பால் தெம்மாடி குழி என ஒன்று கடைபிடிக்கா விட்டாலும் தற்கொலை செய்தவர்களின் அடக்கம் பாதிரியாரின் தலைமையில் பிரார்த்தனையுடன் நடை பெற சட்டம் அனுமதிப்பது இல்லை.
கல்லறை என்ற பெயரில் வெறும் காங்கிரீட் மேடையுடன் காணப்படுவதை விட ஒரு குழிக்கும் ஒரு மரத்தை வைத்து தோப்பாக மாற்றினால் சுற்றுப் புறம் மட்டுமல்ல காணும் மனங்களுக்கும் ஆறுதலாக இருக்கும். வாழ்வே இடம் இல்லாத சூழலில் மரித்தவர்களுக்கு என இடத்தை பராமரிக்கும் போது சில பொது நன்மைகளையும் மனதில் கொண்டு கல்லறைகளை அழகாக
பேண முன் வர வேண்டும். தற்போது 18, 19. நூற்றாண்டு கல்லைரை போல் அழகுணர்வுடன் கல்லறைகள் கட்டபடுவதும் கிடையாது.
சமீபத்தில், சீர் திருத்த கிருஸ்தவர்கள் குடியயேறிய முதல் ஊரான "முதலூருக்கு" சென்றிருந்தோம். 18 நூற்றாண்டிலுள்ள கல்லறைகள் கலை நயத்துடன் கட்டிபட்டிருந்தது, அவர்களை பற்றிய கதைகள் கல்லறைகள் சொல்லியது. மரிப்பவர் ஒரு பாடகராக இருந்தால் அவர் கல்லறை மேல் பாட்டு உபகரணங்கள் போன்ற சிற்பங்கள் வைக்க பட்டிருக்கும். அவர்கள் காலத்திலுள்ள தமிழ் எழுத்துக்களில் அவர்கள் பிறப்பு இறப்பு அவர்களை பற்றி எழுதியவை எல்லாம் இன்று பராமரிபற்று அழிந்துகொண்டிருக்கின்றது. பல மிஷனரிகளின் குழந்தைகள் கல்லறை (இங்குள்ள இயற்கை சீற்றத்தாலும் மற்றும் தொற்று நோயால் இறந்த போது) சிறிய தேவதைகளின் சிற்பங்களுடன் அழகாக வடிவமைத்திருந்தனர். மேலும் கிருஸ்தவ சபையில் பதவியில் இருந்த நபர்களின் கல்லறைகள் அழகாக பராமரிக்கபடுகின்றது மட்டுமல்ல ஆலயத்திற்க்குள் கூட குடி கொள்கின்றது.
சிலருடைய கல்லைறைகள் அவர்கள் உயிரோடு பெறபட்டதை விட அதிகம் மதிப்பு பெறுவதாகவும் நாம் கண்டுள்ளோம். பல ஆயிரம் மக்கள் 50 சென்றுக்குள் ஒரே அடுக்குமாடியில் குடியிருக்க வேண்டிவரும்போது ஒரு மனிதனின் கல்லறைக்கு என ஏக்கர் கணக்கு இடம் இருப்பதும் சிந்திக்க தான் வைக்கின்றது. கல்லறையிலும் பதவிக்கும் பணத்திற்க்கும் மதிப்பு கொஞ்சம் அதிகம் தான் போல!!!!
(புகைப்படங்களாக பதிவு செய்தாலும் எனது துறையிலுள்ள கல்லறையின் மேல் கோபமுள்ள ஒருவரால்அழிக்க பட்டதால் மேலும் அவ்விடத்திற்க்கு செல்லும் சூழல் அமையாததாலும் புகைப்படங்களை பகிரை இயலாததில் கவலையாகவே உள்ளேன். கூடி விரைவில் படங்களுடன் வருகின்றேன்.)

2 comments:

  1. I never read an article on this topic! It's really interesting!

    ReplyDelete
  2. அருமையான, நிறைய பயனுள்ள செய்திகள் அடங்கிய பதிவு.
    மிக்க நன்றி.

    ReplyDelete