28 Mar 2011

‘வடி கொடுத்து அடி வாங்கிய நான்’


‘வடி கொடுத்து அடி வாங்குவது’ என்று ஒரு மலையாள சொல் உண்டு. வடி என்றால் அடிக்கும் கம்பு.   பள்ளியில் படிக்கும் போது வகுப்பு தலைவி என்பதால் பலபொழுதும் எங்கள் ஆசிரியர்களுக்கு என்னுடன் படிக்கும் மாணவர்களை அடிக்க  கம்பு தயார் செய்து தருவது என் வேலையாக இருந்தது. நல்ல விளைந்த உண்ணி(ஒரு வகை வேலி செடி) கம்பு ஒடித்து  அதன் மேல் பக்கம் உள்ள முள்களை கல்லில் உரசி களைந்து பதமாக  ஆசிரியரிடம் கொண்டு சேர்ப்பது உண்டு.   தீவிர கம்னிஸ்டான ஹரிஹரன் சார் “கூட படிப்பவர்களிடம்  இவளுக்கு இவ்வளவு வன்மமா” என்று  எண்ணி முதல் அடி உனக்கு தான் என்று என்னில் இருந்தே  ஆரம்பிப்பார்.   பின்பு நல்ல மூர்க்கமான கம்பு என்பதில் இருந்து பார்க்க ஆரோக்கியமான கம்பாக இருக்கும் ஆனால் சொங்கி கம்பாக கொண்டு கொடுக்க கற்று கொண்டேன்.   தேயிலை கம்பு மட்டும் ஒடித்து கொடுப்பதே கிடையாது 10-12 அடி அடித்தாலும் ஒடியவே ஒடியாது வளைந்து வளைந்து சிவிங்.. சிவிங்.. என்ற சத்ததுடன் அடி விழுந்து கொண்டே இருக்கும்.  சில ஆசிரியர்கள் தலைவராக இருப்பதற்க்கு தண்டனை என்பது போல் “சூரல்” கம்பு தான் வேண்டும் என்று கட்டளை இடுவர்.  அதுவும் முதல் நாள் வாங்கி தேங்காய் எண்ணை இட்டு அடுத்த நாள் கொண்டு செல்ல வேண்டும்.
எங்கள் வீட்டில் அம்மா எங்களை அடிக்க என ஒவ்வொரு கதவு கட்டளையிலும் சூரல் கம்பு வைத்திருப்பார்கள்.  ஒவ்வொரு நாள் செய்ய வேண்டிய வேலைக்கும் அட்டவனை உண்டு.  அதில் முதல் வேலை காலை 6 மணிக்குள் எழுந்து ஆலயத்திற்க்கு திருப்பலிக்கு செல்ல வேண்டும் என்பது தான்.  மழையோ பனியோ காரணம் எதுவாக இருந்தாலும் எங்களை பாதிக்க கூடாது காலையில் கோயில் சென்று வந்து தான் அந்த நாள் ஆரம்பம்!!!  நான் எப்போதும் தூக்க பிரியை என்பதால்  சூரல் அடிதான்  என்னை எழுப்பி விடும்.  அந்த அடியின் பயம்  கொண்டு எழுந்தது திருமணம் முடிந்தது வரை தொடர்ந்தது.  பின்பு என்னவர் தூங்குபரை ஒரு போதும் தொல்லை செய்ய கூடாது என்ற சபதம் எடுத்துள்ளதால் பயமின்றி நிம்மதியான தூக்கத்துடன்  என் காலங்கள் செல்கின்றது.

சபீபத்தில் கம்பு கொடுத்து அடி வாங்கியதை பற்றி தான் சொல்ல வருகின்றேன்.  ஆர்குட் சமூகத் தளத்தில்  இருந்து அமெரிக்காவில் வசித்து வரும் என்னுடைய சொந்த ஊரை சேர்ந்தவரின்  நட்பு அழைப்பு வந்தது.  எனக்கு ஒரே ஆச்சரியம்; எங்கள் பள்ளியில் படித்தவர் அமெரிக்காவில் ஆசிரியரா?  எங்கள் பள்ளியில் 10 வகுப்பு பாசாகுவதை பெரிய சாதனை.  கொஞ்சம் தெனாவட்ட நடக்கும் பசங்களை அழைத்து “எடா நீ கதி பிடிக்கத்தில்லா”(நீ உருப்பட மாட்டே), நீ தந்தை இல்லாத்த பணியல்லே காட்டியது(நீ ஒரு அப்பனுக்கு பிறக்கவில்லையா என்ற அர்த்தம் கொள்ளுதல்), நீ தீர்ச்சயாயும் 10 கிளாஸில் தோற்று போகும் ஞான் பறயுவா (நீ 10 வகுப்பில் கண்டிப்பா தோற்று போய் விடுவாய்) என்று வாழ்த்தி/சாபம் இட்டு அனுப்புவதிலே ஓர் அளவு படிப்பவனும்  10 வகுப்பில் தோற்று போய் விடுவான்! 

இவர் என்னில் இருந்து 3 வகுப்பு முன்னதாக படித்துள்ளார்.  பள்ளியில் முதல் மாணவனாக ஜெயித்ததாகவும் வாழ்க்கையில் மிகவும் போராடி இவ்விடத்தை வந்தடைந்ததாக  கதைத்தார்.  இவருடைய சகோதரர்கள் என்னவருக்கு தெரிந்தவரென்றும் என் குடும்பத்தை நன்கு அறிந்திருக்கார் என்றும் அறிந்தேன்.   நான் இவரை கண்ட நினைவு இல்லாவிடிலும்   என் ஊர்காரர் என்பதால்  பிரத்தியேக மதிப்பாக இருந்தது.  அதனால் அவரிடம் ஸ்கைப் வழியாக  கதைத்து அவர் குடும்பம் மனைவி எல்லாம் தெரிந்து கொண்டேன்.  என்னவரின் புகைப்படம் தொகுப்பில் இருந்து சமீபத்தில் எடுத்த என் ஊர் புகைப்படங்கள் அனுப்பிய போது அவர் பரவசப்பட்டு  நன்றி நன்றி என்று பலதடவை சொல்லி கொண்டார்.

இந்தியாவில் உள்ள அவரின் மனைவியிடம் நான் பேச வேண்டும் என்று  அவர் மிகவும் கேட்டு கொண்டார்.  மேலும் அவர் மனைவியிடம் நான் நட்பை உருவாக்க வேண்டும் என்றும் இந்தியா வரும் போது சந்திக்கலாம் என்றும் பாசமாக வேண்டு கொள் விடுத்தார்.   இங்குள்ள பெண்களின் மன போங்கு தெரிந்ததால் தயக்கம் இருந்தாலும்  அவரின் வேண்டுகோளுக்கு இணங்க பேச சம்மதித்தேன்.  

மத்திய வயதை கடந்த கணவர்களை பற்றி  கதைக்கும் போது கூட எங்க சார்…. சார் என்று  அவரை ஒரு பீடத்தில் தூக்கி வைத்து சராசரி மனிதனில் இருந்து அன்னிய படுத்தி விடுவார்க்ள்.  இங்குள்ள ஆண்களும் அவர்கள் மனைவிகள் பக்கத்தில் உள்ள போது அநியாயத்திற்கு படம் போடுவார்கள்.  மனைவியிடம் மட்டுமே பேசுவது போலவும் மற்று பெண்கள் அன்னிய கிரகவாசிகள் போன்றும் பார்ப்பார்கள். (மனைவி அருகில் உள்ள போது மட்டும் தான், அலுவலகத்தில்/ பள்ளிகளில் இவர்கள் நிறம் வேறு…. )இவையை பற்றி ஏற்கனவே  தெரிந்தால் கொஞ்சம் தயக்கம் இருந்தாலும்  சரி நம்ம ஊர்கார் விரும்புகின்றார் அதும் அமெரிக்காவில் உள்ளவர் என்ற தைரியத்தில்   தொலை பேசியில் தொடர்பு கொண்டேன்.

மறுமுனையில் அவர் மனைவி அங்கலாய்த்து கொண்டு ஒரு போலிஸ்  குற்றவாளியிடம் விசாரிப்பது போல் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.  நீங்க யார், எங்கு உள்ளீர்கள், உங்களுக்கு எப்படி என் கணவரை தெரியும் அவரை கண்டுள்ளீர்களா, உங்கள் கணவர் யார்?.... ஒரு வழியாக பதில் சொல்லி தப்பித்தேன். நான் மூக்குடைந்ததே காட்டி கொள்ளாது உங்கள் குழந்தைகள் நலமா என்று விசாரித்து கொண்டேன்.   நானாக வலிய உங்க வீடு எங்கு உள்ளது என்று கேட்டதிற்கும் சரியாக முகவரி சொல்ல கூட அவர் விரும்பவில்லை.  இவ்வளவுக்கும் அவர் கல்வி அறிவு அற்றவர் அல்ல; முதுகலைப் பட்டம் முடித்து தற்போது ஆசிரியர் பயிற்சியிலும் உள்ளார்.   ஒரு சராசரி மரியாதைக்கு கூட என் குழந்தைகள் நான் வசிக்கும் இடம் பற்றியோ விசாரிக்க வில்லை.  படிக்க நிறைய உள்ளது என்று கூறி அவசர அவசரமாக அலைபேசியை துண்டித்து கொண்டு விட்டார்.

 இதை பற்றி அவர் கணவரிடம் நான் எதும் சொல்ல வில்லை.  அவர் மனைவியை அவரிடமே குறை சொல்லி தர்மசங்கட நிலமைக்கு கொண்டு வர விரும்பாததால் உங்கள் மனைவியிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன் என்ற ஒரு மின்மடல் அனுப்பி விட்டு கிடைத்த அடிக்கு என்னவரிடம் என் சோக கதையை சொல்லி மருந்து இட்டு ஆறுதல் பட்டு கொண்டேன்.  

நேற்று மறுபடியும் என் ஊர்காரரிடம் இருந்து  வேண்டுகோள் என் மனைவிக்கு தேர்வு, அவள் வெளியில் போக இயலாது அவளுக்கு தேர்வு மாதிரி கேள்வி தாள் வாங்கி தர இயலுமா என்று கெஞ்சுகின்றார்.   எனக்கும் உதவ விருப்பம் தான், ஆனால் புத்தகத்தை கொண்டு வீட்டில் கொண்டு கொடுத்து   மறுபடியும் வடி கொடுத்து அடி வாங்கவா? வலி தாங்க மாட்டேன்பா என்று ஒளிந்து கொண்டேன் வேறு வழி?

தாலி கட்டிவிட்டார் என்று பெண்கள் இப்படி பாச கயிற்றால் கட்டி போட்டு அடிமைப்படுத்தி இவர்களும் அடிமையாக  வாழ பழகி கொள்கின்றார்கள்.  இந்த மாதிரி பெண்களின் நிழல் பட்டால் கூட இந்த பறவை மனம் கருகி விடும்!!!!

2 comments:

  1. இந்தப் பதிவை அந்த அமெரிக்க நண்பரோ/அவர் மனைவியோ படித்தால் வருத்தம் அடைவார்களே

    ReplyDelete
  2. நல்ல பதிவு ஜோசபின்.
    இப்படியான பெண்களும் இருக்கிறார்கள். ஆண்களும் இருக்கிறார்கள்.

    இந்தியத் தமிழைப் பிரச்சனையின்றி வாசித்து விளங்கிக் கொள்வேன்.
    ஆனாலும் அழகான உங்கள் பதிவில் சில சொற்களை விளங்கிக் கொள்ளக் கடினமாகவே இருந்தது.
    குறிப்பாக சொங்கி கம்பாக... என்பதில் சொங்கி என்பதன் பொருள் புரியவில்லை.
    தடி கொடுத்து அடி வாங்குவது.. என்பது எம்மிடமும் வழக்கில் உண்டு. ஆனால் வடி கொடுத்து என்பது மலையாளம் என்பதால் நீங்கள் விளக்கம் தந்ததால் மட்டுமே விளங்க முடிந்தது.
    கம்பு என்ற சொல் எமது எழுத்து வழக்கில் இல்லை. ஆனால் பேச்சு வழக்கில் தாராளமாக உண்டு.

    ReplyDelete