28 Jul 2012

நவீன பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்!

பெண்கள் கல்வியறிவு பெற்று விட்டால் நாட்டில் எல்லா துன்பங்களும் துயர்களும் நீங்கியது போல் பிரசாரம் செய்யப்படுகின்றது. இன்னும் ஒரு படி மேலே போய் பெண்கள்  அரசியல் அதிகாரத்தில் வந்து விட்டால் நம் இந்தியா வல்லரசு ஆகி விட்டது என்றும்  கதையளக்கின்றனர். ஆனால்  அரசியலில் வந்த பெண்களால் அரசியல் என்னவானது?  ஆண் தலைவர்கள் வாய் கட்டி, வங்கி கணக்கை மட்டும் உயர்த்த ஆரம்பித்து விட்டனர். அடிமட்ட பஞ்சாயத்து தலைவிகள் கூட அடி தாதாக்களாக மாறினர்!  நாட்டின் உயர் பதவியான ஜனாதிபதி பதவி கூட  பெண் கையில் சென்ற போது விதிவிலக்காகவில்லை இன்னும் கேலிக்குரியது .


பெண்களுக்கு என்ற சில குணங்கள் உண்டு. அது அவர்கள் மன உளவியலும் உடல் அமைப்பும்  சார்ந்து வருவதே. அவ்வகையில் பெண்களால் விசாலமாக சிந்திக்க இயலாது. கருணை, பரிவு கொண்டவர்கள் தான் என்றாலும்  தன் குடும்பம் கடந்து தான் அடுத்த தளத்தில் வருவார்கள். அதே போல் பழகுவதில் ஆண்களை போன்று பெரும்தன்மையாக இருப்பதில்லை. வைராக்கியம், வன்மம் கொண்டு ஒரு தொடர் கலவர சூழலில் நிர்வாகத்தை கொண்டு செல்கின்றனர். தன்னை சீண்டியவர்களை காத்திருந்து அழிக்க துடிக்கும் மனம் அவர்களுடையது. ஆனால் ஆண்களால் மன்னிக்க, மறக்க இயலும் இது ஆண்கள் சிறப்பு அல்லஅவர்கள் இயல்பு, அவர்கள் மூளை அமைப்பே அப்படி தான் அமைந்துள்ளது. இப்படி எல்லாம் எழுதினால் சில பெண்கள் நினைப்பார்கள் பெண்களுக்கு எதிராக இன்னொரு பெண் எழுதுகின்றார் என்று. ஆனால் அதுவே கசக்கும் உண்மை.

ஆண் ஒரு கோடியில்  என்றால் பெண் மறு கோடியில் நிலை கொள்கின்றனர். பாஸ்ட்டிவ்-நெகட்டீவ் மின் கம்பிகள் இணைந்து  மின்சாரம் இயங்குவது போல்  இரு வெவ்வேறு துருவங்கள் சரியான வகையில் இணைந்து செயல்படுவாதல்  மனித குலம் செழிக்கின்றது.  

அதிகார மட்டத்தில் மட்டுமல்ல கல்வியறிவு பெற்ற  பெண்கள் மத்தியிலும் பெண்கள் படித்தால் எல்லாம் சுபமாகி விட்டது என்றால் அது பொய்க்கு ஒரு முகமூடி இட்டது போன்றதே. இன்று பல பொறியியல் கல்லூரிகளில் ஆண்களுக்கு நிகராக படித்து வேலைக்கு போகவுள்ளோம் என்று போட்டி போட்டு படிக்கும் பெண்களில் எத்தனை பேர் வேலைக்கு செல்கின்றனர் என்று கணக்கெடுத்தால் தெரியும், அரசு கொடுக்கும் பல ஆயிரம் ரூபாய் மானியம் விரயமாக்கப்படுகின்றது இவ்வழியாக. 



நடுத்தர வயது அம்மாக்களின் நிலை இன்னும் பரிதாபமாக செல்கின்றது.  குழந்தை எழும் முன் வேலைக்கு போய் அடைந்த பின்பு வீடு வந்து சேருகின்றனர்.  குழந்தைகள் பெற வேண்டிய உளைவியலான நெருக்கம், பாசம், அன்பு மறுக்கப்பட்டு முரடர்களாக வளர்கின்றனர். பல குழந்தைகள் குடியிருப்புகளில் பூட்டியிடப்பட்ட அறைகளில் தனிமையில் வளர்கின்றனர், விளையாடுகின்றனர், வாழ்கிகின்றனர்.அம்மாக்களும் வேலையிடங்களில் மன அழுத்ததுடன் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர்.
பெண்கள் வேலைக்கு போவதால் நாடு- வீடு செழிக்கும் என்று மேல் போக்காக கூக்கிரலிடும் சமூகம் அடுத்த தலைமுறையின் வளமையான எதிர்காலம் பற்றி உண்மையாக சிந்திக்க தவறி விடுகின்றனர். பழைய பல வீடுகளில் பாட்டிகளாவது பேரக்குழந்தைகளுடன் சுகமாக இருந்தனர். ஆனால் இன்று பென்ஷன் வாங்கும் பல பாட்டிகள் தங்கள் தனி அறைகளில் தொலைகாட்சி பெட்டியுடன் முடங்கி விட்டனர். இவர்களால் தங்கள் நிலையை விட்டுக்கொடுக்கவும் இயலவில்லை ஒத்து போகவும் இயலாது கொடிய துன்பத்தில் வாழ்கின்றனர்.  பாசத்தை கொடுக்க நேரமில்லாது வேலை வேலை என்று ஓடி  குடும்பத்தை பணத்தால் உயர்த்தியவர்கள் இன்று மாளிகைகளில் மனித வாசமற்று தனிமையில் அல்லாடுகின்றனர்.

என் உறவினர் வீட்டுக்கு சென்ற போது எதிர்வீட்டில் ஒரு வயதான பெண்மணி மாடியில் இருந்து கொண்டு சன்னல் வழியாக வெளியே நோக்கி கொண்டு நின்று கொண்டிருந்தார்.  அவ்வீட்டு குழந்தைகள் பள்ளி விட்டு ஆட்டோவில் வந்தன, பையிலிருந்து சாவியை எடுத்து நுழைவு வாயிலை திறந்து தங்கள் வீட்டிற்க்குள் செல்கின்றனர்.  அப்பாட்டியும் பேரக்குழந்தைகளை நோக்கவில்லை அக்குழந்தைகளும் பாட்டியை தேடவில்லை.  


 இன்னொரு வீட்டில் வேலை ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையான வயதான பெண்மணிக்கு எக்காரணம் கொண்டும் கல்லூரி பேராசிரியையான தன் மருமகளுடன் ஒத்து போக இயலவில்லை. தன் பெட்டியும் படுக்கையும் எடுத்து கொண்டு கட்டனம் செலுத்தி வசதி வாய்ப்பாக தங்க கூடிய அனாதை ஆஸ்ரம் சென்று விட்டார். வீட்டு விசேஷங்களுக்கு மட்டுமே  பங்கெடுத்து சென்று கொண்டிருக்கின்றார். சமீபத்தில்  மருமகள் ஒரு விபத்தில் இறந்து விட சிறு பிள்ளைகள்   தங்கள் வீட்டில் அனாதர்களாக வளர்கின்றனர்.

ஆண்களுக்கு  பெண்கள் படித்து வேலைக்கு போவதால் நல்லது  என்றால் அவர்கள் நிலை பெரும் கவலைக்குறியதாக மாறிவிட்டது. காலை, நேரமே எழுந்து சமையல் செய்து வேலைக்கு கொண்டு விடுவதிலிருந்து தன் அலுவல் முடிந்து பேருந்து நிலையத்தில் காத்து  நின்று, மனைவியும் அழைத்து கொண்டு வீடு வந்து சேர்வது வரை போராட்டம் ஓயவில்லை.   நிம்மதியாக மனம் விட்டு பேசிக்கொள்ள நேரம் கிடைக்கின்றதா என்றால் இல்லை என்ற நிலையே.


இதற்க்கு மத்தியிலும் சந்தேகச் சண்டை, நானா நீயா என்ற சண்டை, பணத்தை வங்கியில் போடுவது, எடுப்பது, எடுத்து செலவழிப்பது என எல்லாம் சண்டையில் முடிகின்றது.  பிள்ளைகளும் தேவைக்கதிகமான பொருட்கள் வாங்கி பயண்படுத்தி  நுகர்வு கலாச்சாரத்தில் மூழ்கி விடுகின்றனர்.


இளம் பெண்கள் தான் நிம்மதியாக இருக்கின்றார்கள் என்றால் படிப்பு படிப்பு என்று பட்டிணி-பசியோடு கல்லூரி படிப்பை முடிக்கும் பெண்கள்; பின்பு வேலையிலும் போதிய விடுமுறை கிடைக்காது மன-உடல் அளவில் அழுத்தத்தில் வாழ நிர்பந்திக்கப்படுகின்றனர். பல அலுவலங்களில் அவர்களுக்கான சுகாதாரமான கழிவறை வசதிகள் கூட இல்லை. சமீபத்தில்   இளம் பெண்கள் ஐடிநிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்த முதல் மாதத்திலே  தன் தகப்பன், தாயை விட பல மடங்கு டாலராக ஊதியம் வாங்கினர். வீட்டில் வந்தால் பெற்றோர்கள் பூச்சி புழுபோல் தெரிந்தனர். கல்யாணம் முடித்த போதோ கணவர்கள் நெளியும் புழுவாக தெரிந்து வாழ்கையை தொலைத்தவர்கள் பலர். அப்பாவை அப்பா என்று அழைத்து வளர்ந்த பல மகள்கள் போ, வா நீ என்று அழைத்தும் அவ மரியாதை செலுத்தினர். 

திருமணம் பின்பு நிம்மதியாக இருந்தனரா என்றால் வேலை நிரந்தரம், உயர்வு விடுமுறை என எல்லாம் நோக்கி  வாழ்க்கையை ரசித்து வாழாது ஒரு வித அலுப்பிலே நாட்களை கடத்தி சென்றனர். ஒரு திரைப்படம் கண்டு வரக்கூட நேரம் இல்லாது அல்லாடினர். பல பெண்கள் குழந்தை பேறு கோளாறுகள், பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியம் அற்று பிறந்தது, என பல சவால்களை எதிர் கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.  


இதுவெல்லாம் படித்த பெண்கள் கொண்ட துன்பம் என்றால் படிக்காது கூலி வேலைக்கு  சென்ற பெண்கள் கொண்ட துயர் வேறு ஒரு விதமாக இருந்தது.

அதை அடுத்த பதிவில் நோக்குவோம்.....................



21 Jul 2012

நீதிக்காக போராடும் பெண்கள்!


பெண் விடுதலை முன்னேற்றம் என கோட் சூட் போட்டவர்கள், லிப்டிக் அடித்த பெண்மணிகள் பேசிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையாக பாதிக்கப்பட்ட பெண்களால் தங்கள் உரிமைக்காக போராட முடிகின்றதா அல்லது ஒரு தளம் கிடைக்கின்றதா என்றால் இல்லை. 


யார் யார் பாதிக்கப்படுகின்றார்கள் என்றால் எல்லா நிலைகளிலுமுள்ள பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.  அதில் செல்வந்தர்கள் என்றோ எழை, படித்தவர்கள் பாமரர்கள் என்றோ பாகுபாடில்லை.

சமீபத்தில் எனக்கு தெரிந்த ஒரு பாமர இளம் பெண் தன் குடும்பத்தாராலே கொல்லப்பட்டார். தன் முடிவுக்கு இப்பெண் எப்படி  காரணம் ஆனார் அல்லது சமூக-அரசியல் சூழல் இவளை தள்ளியதா என்று நான் வருத்ததில் ஆழ்ந்திருக்கும் போதே இன்னொரு படித்த பெண் ஒரு கயவனை நம்பி ஒரு பொதி பிரியாணி சாப்பிட்டு விட்டு மனதில்லா மனதுடன் ஆட்டோவில் ஏறிச்செல்வதை கண்டேன். நிச்சயமாக ஏதாவது ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவியாகத்தான் இருக்கவேண்டும். கையில் ஒரு புத்தக பை இருந்தது. அவள் பார்வையிலும் வெகுளித்தனம் இல்லாது சுற்றும் உற்று நோக்கி கொண்டே இருந்தாள். குறிப்பாக நான் கவனிப்பதை புரிந்து கொண்டு எனக்கு தன் கண்ணால் மௌவுனமான ஆனால் தீர்க்கமான விடை தந்து சென்றாள்.

ஒரு பெண் தன் உடலை அடமானம் வைப்பது தன் பசிக்கும் குழந்தைக்கு உணவு கொடுக்க தன் நோயாளியான கணவரை காப்பாற்ற என்ற கருணைச்சாக்கு இந்த பெண்ணிடம் நிச்சயம் நாம் செலுத்த இயலாது.  இவள் கல்வி கற்றவள், மதிப்பெண் அல்லது தேற்வு வெற்றி பெற என்ற காரணங்களாக இருக்கலாம். ஆனால் ஒரு முடிவை எடுக்கும் திறமை  ஒரு வாய்ப்பு இப்பெண்ணிடம் இருந்தது. 

நாங்கள் உணவம் சென்ற போது இப்பெண்ணுடன் வந்தவன் பழம்கால சினிமா கதாநாயகன் போல் சிவந்து, 6 அடி உயர கொண்டு நேர்கொண்ட பார்வையுடன் நிமிர்ந்த நெஞ்சுடன் இருந்தான். இவள் அழுது  கூனிக்குறுகி ஒடுங்கி தான் இருந்தாள். அவனோ தொடர்ந்து மகுடி ஊதுவது  போல் பேசிக் கொண்டே இருந்தான். நேரம் ஆக ஆக அவள்  அழுது  இருந்த முகம் சிரிக்க ஆரம்பித்தது. உணவக சிப்பந்திகள் இந்த காட்சிகளை கண்களால் படம் பிடித்து கொண்டிருந்தனர். உணவகத்தில் இருந்து வெளியேறும் போது அவன் சற்று வேகமாக முன் நடந்து ஆட்டோவில் ஏறி கொண்டு இவளை எதிர்நோக்கி  மன்மதப்பார்வையுடன் இருந்தான். அவளோ வலது பக்கம் ஓடினால் ஜங்ஷன் பேருந்து நிலையத்தை பிடித்திருக்கலாம் ஆனால்  இடது பக்கம் ஒரு பூனையை போல் நடந்து அவன் காத்திருந்த ஆட்டோவில் ஏறி ஒரு கரையில் ஒதுங்கி இருந்தாள். ஆட்டொ கிளம்பி விட்டது. எங்கள் வாகனம் பின்னால் செல்கின்றது. பின் கண்ணாடி சண்ணல் வழி நோக்கிய போது  மறுகரையில் இருந்தாலும் அவன் நீளமான கைகள் அவள் தோள் மேல் இருந்தது. ஒரு வளைவில் எங்கள் வாகனம் வேறு பாதை நோக்கி வந்த போது பெண் என்ற நிலையில், நான் அவளை நினைத்து கொண்டே பயணித்து கொண்டிருந்தேன்.

இன்றைய போட்டி சமூகச்சூழலில் பெண்கள் கற்வமாக வாழ்வது என்பது சர்கஸில் கயிறில் நடப்பது போல் தான். இன்னொரு பெண்ணை தன்வசப்படுத்த கொடுமைக்கார மனைவி, கோபக்கார ம்னைவி, மதிக்காத மனைவி, காமமற்ற அன்பு என பலபல காரணங்கள் சொன்னாலும் ஆண்களின் உண்மையான உளவியல் தெரிந்து கொள்ளாது இவர்களை கண்டு பரிதாபப்பட்டு தங்கள் வாழ்கையை அழித்து கொள்ளும் எத்தனையோ பெண்கள்.

சமீபத்தில் ஒரே புத்தகத்தால் உலகம் முழுதும் தன் கவனத்தை திருப்பியவர் ஜெஸ்மி என்ற கிருஸ்தவத் துறைவி.  இவர் தனது 52 வது வயதில் நீதிகாக போராடுவதாக சொல்லியிருந்தார். கிருஸ்தவ துறவிகள் உருவாக்குவதில் "ஆண்வரின் அழைப்பு" என்ற பெயரில் பெரும் ஊழல் உண்டு.  கத்தோலிக்க சபையை சேர்ந்த ஒவ்வொரு பெண்ணும் தன் 15 வயதில் இந்த சோதனையை கடக்க வேண்டி வருவது உண்டு. 10 வகுப்பு முடிந்ததும் சபை எங்களை  ஆண்வருக்கு சேவை செய்ய வாருங்கள் என்று இன் முகத்துடன் அழைக்கும். ஒரு 5 நாள் வகுப்பு உண்டு. அங்கு பல மத அறிஞர்கள் சொற்பொழிவு ஆற்றுவார்கள். நாம் மனிதனுக்கு சேவை செய்வதை விட உயர்ந்த எண்ணம் கொண்டு  ஆண்டவருக்கு சேவை செய்வதின் மேன்மையை பற்றி சொல்வார்கள்.  திருமணம் பாலியல் என்ற எண்ணம் வராத குழந்தைப்பருவத்தில் இந்த கேள்வியின் அர்த்தம் புரிந்து கொள்ள கடினமாக இருந்தாலும் சிலர் தன் விருப்பம் கொண்டு தூய உள்ளத்தோடு சேர்ந்து சிறப்பாக பணியாற்றி வருகின்றார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. தொடர்ந்து 5 வருட படிப்பு  முடியும் தருவாயில் இளம் வயதை எட்டுகின்றனர்

இதில் சில குழந்தைகள் வீட்டில் ஏழ்மை, தனக்கு கீழ் பல இளைய சகோதர்கள் படிக்க வேண்டிய சூழல் அல்லது சண்டையிடும் பெற்றோரை கண்ட வெறுப்பு, மடத்திலுள்ள சுத்தமான சுகாதாரமான உணவு சபை உறவினர்களிடம் பெறும் மரியாதையான வாழ்கை என பல விடயங்கள் சுண்டி இழுக்கும் இவர்களை மடத்திற்க்குள்.  செல்வந்த குழ்ந்தைகளுக்கு இன்னும் பல மரியதைகள் சேர்ந்து கிடைக்கும். படிக்க திறனுள்ள குழந்தைகளுக்கு வெளிநாட்டு வாழ்க்கை உயர் பதவியிலுள்ள வாழ்கை என   பல கிரீடங்கள் காத்து இருந்தாலும் துறைவறம் என்ற சிலுவையை தானாக சுமக்க முன் வராவிடில் அது சுமக்க மிகவும் கடினமே. தமிழகத்தில் பல கிராமங்களில் குழந்தைகளை பிள்ளைபிடிக்காரன் போன்று பிடித்து வருவதால் மடத்தில் காணும் உண்மை நிலை இல்லை. கல்வி கிடைக்காது கஞ்சிப்பானையுடன் வயலுக்கு சென்று வந்து நாலயைந்து பிள்ளைகளையும் பெற்று உடைந்த  கூரைக்குள் ஏழ்மையிலும் வறுமையிலும் வாழ்வதை விட சன்னியாசியாக வாழ பலரும் முன்வருகின்றனர் தோல்வியும் காண்கின்றனர்.

ஜெஸ்மி என்ற பெண் துறவியாக அவதாரம் எடுத்து தற்போது பெரும் பூகம்பத்தை கிளம்பியுள்ள கேரளத்துறைவி கூட சேவை கருணை சார்ந்த  வாழ்கை என்பதை விட சில கற்பனைகள் பொய்யான அறிவு சார்ந்தே மடத்தில் சேர்ந்துள்ளார் என்று அவர் நேர்முகம் கேட்டால் புரிந்து கொள்ளலாம்.  போதாததிற்க்கு இவர்  ஆங்கில மொழியில் விருப்பம் கொண்டு படித்துள்ளார். ஷெல்லி , ஷேக்ஸ்பியர் என்று இருந்த இவர் யேசு நாதரையும் சேர்த்து குழம்பிய நிலையில் கன்னியாஸ்திரியாகி  ஒரு கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.  ஆனால் இவரின் புத்தகப்படி; உடல், உறவு, தன்னுடைய கற்பனை, கிருஸ்தவ போதனை என்ற குழப்பத்தில் இருந்த இவரை பாலியலாக பல  ஆண்-பெண் துறைவிகள் தவறுதலாக பயன்படுத்தியுள்ளனர் துன்புறுத்தியுள்ளனர் என்று தெரிகின்றது.

கிருஸ்தவ சபையில் ஒருவர் துறவரம் சென்றுவிட்டு வேண்டாம் என்று உதறி வெளியில் வந்தாலும் அவர்கள் கைகொண்ட கல்வி, ஆங்கிலபுலமைவைத்து வேலைவாய்ப்பு பெறவோ மறுபடி திருமணம் என்ற பந்ததில் கடந்து சிறந்த வாழ்கை வாழ எந்த தடையும் இல்லை. அப்படி பலர் வாழ்கின்றனர்.  சபை குறுகே பாய்ந்து வந்து தடுப்பதும் இல்லை. ஆனால் சமூகத்தை எதிர் கொள்ள  துணிவு வேண்டும் உண்மை வேண்டும். தனது 52 வயதில் போராடியவரால் ஏன் 22 அல்லது தனது 32 வயதுகளில் போராட துணிவு வரவில்லை என்ற கேள்வி எழுகின்றது.  

சாதாரண குடும்ப வாழ்வில் உள்ள பெண்ணுக்கும் 52 என்ற வயது மன உளைச்சில் கொடுக்கும் வயதாகவே இருக்கும். தன் இளமை  மறைந்து விட்டு கொடுப்பே வாழ்க்கையாகி, வழிவிட்டு  தன் பிள்ளைகளில் இளம் வாழ்கையை கண்டு ரசிக்க வேண்டிய சூழலில் பல பெண்கள் தடுமாறுவதால் மாமியார் கொடுமை, என பல பட்டங்கள் பெற்று வாழும் சூழல் நிலவும் வயது இது. அதே போன்று மடங்களிலும் 52 வயதில் பழைய கவனிப்பு மரியாதை கிடைக்காது வரும் சூழலில் நீதிக்காக போராட விளைந்தது தான் புதிர்.

 இதே போன்றே பாதிக்கப்படும் பல பெண்கள் உண்டு. சமீபத்தில் ஒரு எழுத்தாளனுக்கு முகநூலில் செய்தி அனுப்பி அவரிடம் இருந்து பெறப்பட மோசமான செய்திக்கு நீதி கேட்டு சமூகப்போராளியுடம் முகம்தெரியாத ஒரு பெண் வந்தார். செய்தி பெறவும் தடுக்கவும் இணையத்தில் வழியுள்ள போது செய்திகளை பெற்று மகிழ்ந்து விட்டு ஒன்றும் தெரியாத வெள்ளந்தியாக வேடமிட்டது  தன் பெண்மையை அறிவை கேவலப்படுத்துவது போன்று தான். இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக மட்டுமே இருக்கும்.

தங்கள் நிலையை மறந்து தங்கள் பெண் என்ற மாண்பை, கவுரவத்தை மறந்து விட்டு பின்பு அதை தேடுவது கண் கெட்ட பின்பு சூர்ய நமஸ்காரம் போன்று தானே இருக்கும்?

20 Jul 2012

பெண்கள் முன்னேற்றம் எவ்வழியில்...........





எல்லா போராட்டங்கள் போல பெண்கள் விடுதலையும் ஒரு வியாபார நிலையை அடைந்து விட்டது. ஒரு நடிகையை கேலி செய்து விட்டார்கள் என்றால் எதிர்ப்பு தெரிவிக்கும் பெண் சங்கம்; கடந்த வாரம் ஒரு சட்டமன்ற உறுப்பினரால் கொலைச்செய்யப்பட்ட 15 வயது பெண் குழந்தைக்காக போராட முன்வரவில்லை.  உரிமைக்குரல் கொடுக்க கூட் ஒரு அரசியில் உள்ள நிலையில் பெண் விடுதலை, ஆண் ஆதிக்கம் என்பதின் உண்மை அர்த்தம் விளங்கவில்லை.

ஆண் ஆதிக்கம் என்பது  ஆண்களால் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமை என்பதை விட இருபாலரும் ஒருவருக்கு எதிராக நிகழ்த்தும் ஒரு ஆதிக்கமான நிலையை குறிப்பதாகவே எண்ணுகின்றேன். ஒரு ஆண் ஒரு பெண்ணை ஆதிக்கம் செலுத்துவதை விட ஒரு பெண் வாழ்வில் அவள் அம்மா வடிவில், ஆசிரியை வடிவில், உடன் வேலை செய்பவள் வடிவில் பெண்ணுக்கு பெண்ணே ஆதிக்கம் செலுத்தும் நிலையே நிரம்பியுள்ளது. பல பெண்கள் தன்மானம் கருதி வெளியில் சொல்வதில்லை. ஆனால் அடாவடியான பெண்களில் குரல் மாற்றொலியாக பல ரூபத்தில் ஒலிக்கின்றது.

பல வேளைகளில்  பெண்கள் தங்கள் உணர்ச்சிவசப்படுத்தும் பேச்சாலும் , புலம்பல்,கோள்மூட்டாலும் தப்பித்து கொள்கின்றனர். தங்களை வலிமையற்றவர்களாக காட்டி கொள்கின்றனர்.  ஆனால் இது ஒரு தந்திரம் மட்டுமே. பெண்களை போன்று நெளிவு சுளிவாக சிந்திக்கும் திறன் ஆண்களுக்கு இல்லை. ஆண்கள் நேராக சிந்திப்பவர்கள் என்பதால் பெண்களை நேர்கொள்ள முடியாத  நிலையில் தன் ஆயுதமான உடல் வலிமையை கையிலெடுக்க நிர்பந்திக்கப்படுகின்றனர். அல்லது பின்னால் நின்று அவளை கெட்டபேச்சால் திட்ட துணிகின்றனர். ஆனால் திட்டம் போட்டு மற்றவர்களை கெடுக்க அழிக்க பெண்களுக்கு நிகர் பெண்கள் மட்டுமே என்றால் அதுவே உண்மை. அடுத்தவர்களை ஆதிக்க செலுத்துவதை ஒரு வெறியாக கைகொண்டு வாழ்கின்றனர்.

பொறாமைக்கு ஈடும் அவர்களை தவிற வேறுயாராலும் இயலாது. 

அடுத்தவர்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாது தாங்கள் நினைப்பது மட்டுமே சரி என்றும் தான் மட்டுமே நல்லவள் வல்லவள் என்ற மேட்டிமையில் வாழ்கின்றனர்.

இன்று நான் சந்தித்த, பள்ளி முதல்வரான என் தோழி, தன் அனுபவத்தை இப்படி தான் சொல்கின்றார். ஒரு முதல்வரிடம் பணிவாக நடந்து கொள்ள விரும்பாத ஆசிரியைகள், அந்த பள்ளியின் தாளாரை சந்தித்து தனி இடத்தை பிடித்து விட தயங்குவதில்லை. ஒரு முதல்வர் என்ற பதவியை ஒரு கேலிக்குறிய இடத்தில் நிறுத்திவிட்டு தங்கள் சுயமான ஆசைகளை நோக்கங்களை நிறைவேற்றி கொள்கின்றனர். இதிலுள்ள தார்மீக கேள்விகளோ, ஒழுக்கமோ அவர்களை அலட்டுவதில்லை. அந்த நேர தேவையை மட்டும் மனதில் கொள்கின்றனர்.

பெண்கள் அதிகமாக பணிபுரியும் துறை என்ற நிலையில் கல்வி நிலையங்கள் போர் தளங்களாகவே மாறியுள்ளது. ஒரு பெண் மன அமைதியுடன் பணிசெய்யும் சூழல் அங்கு இல்லை. பல ஆசிரியைகள் இதனால் மன உளைச்சல் அதை தொடர்ந்த உடல் உபாதைகளால் துன்புறுகின்றனர். கேன்டீன், பெண்கள் கூடும் இடமெங்கும் பெருமூச்சுகள் கொண்டு நிறைந்து உள்ளது. இதற்க்கு பெண்கள் மனநிலையை காரணம். அவர்களால் அடுத்தவர்களை சகித்து கொள்ளவது என்பது இயலாத காரியம். பொது நிகழ்ச்சிகளில் கூட, ஆண் ஆசிரியர்கள் ஒரு குழுவாக நின்று அரட்டையில் நேரம் செலவிடும் போது பெண் ஆசிரியைகள் இரண்டும் மூன்று பேராக நின்று குசுகுசுத்து கொண்டு நிற்பார்கள். இவர்கள் பேசும் விடயங்கள் கூட மாணவர்கள் முன்னேற்றம் பற்றியோ, சமூகத்தில் நிகழும் வறுமையை பற்றியோ, தண்ணீர் தட்டுபாடு  பற்றியோ இருப்பதில்லை; தான் வாங்கியிருக்கும் சேலையை பற்றியும் தன் மகன் வீரச்செயல் அல்லது கணவனுடன் உள்ள செல்ல-ஊடல்கூடல் பற்றியதாக தான் இருக்கும்.

பெண்கள் படித்தால் எல்லா சிக்கலும் ஓய்ந்து நாடு விழிப்புணர்வை நோக்கி செல்கின்றது என்றனர். ஆனால் தான் பெற்ற கல்வியை வைத்து சமூக மதிப்பீடுகளுக்கு புது அர்த்தம் கற்பிக்கின்றனர், அதை வைத்தே அடுத்தவர்களுக்கு குழி பறிக்க நினைக்கின்றனர்.

யதார்த்தமான, வெகுளியான பெண்கள் உலகம்; வஞ்சனைக்கும் கோபதாபங்களுக்கும் தூபம் இடம்படியாக மாறி வருகின்றது. இன்று பல இளைஞர்கள்  படித்த பெண்கள் தங்கள் மனைவியாக வருவதையே ஆபத்தாக பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

அரசியலிலும் சம பங்கு தர போராடும் பெண்கள் அந்நிலையை எட்டி விட்டால் விடுதலை பிறக்குமா அல்லது விடிவே இல்லாது போகுமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.



17 Jul 2012

10 ஆம் வகுப்பில் உல்லாசமாக சிரிக்கும் கணவர்!

 10 ஆம் வகுப்பு  குழந்தைகள் புரிந்து படிக்கும் காலத்திலுள்ளது.  இவ்வேளைகளில் அவர்களுக்கு படிக்க  தயாரிக்கும் புத்தகங்கள் ஆக்கபூர்வமான சிந்தனைக்கும் அறம் சார்ந்த வாழ்கைக்கும் உதவும் படியாகவும் கவனமாக வடிவமைத்திருக்க வேண்டும். ஆனால்  புத்தகங்களை நோக்கினால் அரசியல் நோக்கங்களும்  தப்பிதங்களும் மேட்டிமையான   எண்ணங்கள் கொண்டு தயாரித்திருப்பதாகவே தெரிகின்றது.

கவிதைகள் பாகத்தில் திருக்குறள் 2 பாகமாக 40 குறள் படிக்க கொடுத்துள்ளனர்.   தமிழில் கவிதைகளுக்கு அந்தளவு பஞ்சமா என்று தோன்றுகின்றது. கவிதைகள் சமகாலத்தில் எழுதுபவை, சங்ககாலத்தில் எழுதியது என பிரித்து கொடுத்திருக்க்

துணைப்பாடப்பகுதியில் தமிழில் சாகித்திய அக்காடமி அவார்ட்டு வாங்கின எழுத்தாளர்களின் ஒரு சில கதைகளையாவது தேர்ந்து எடுத்திருக்கலாம். சமகால எழுத்தாளர்கள் எழுத்தை பற்றி புரிதலை கொடுக்க விரும்ப்பாத பாடபகுதிகள் எங்கும். தோப்பில் மீரான், வண்ணதாசன், ஜெயமோகன், போன்ற ஒரு எழுத்தாளரும் மதிக்கப்படவில்லை.

செம்மொழி,தொன்மைத் தமிழ்,தமிழ் வளர்ச்சி என குண்டு சட்டியில் குதிரை ஓட்ட வைத்துள்ளர்.

10 ஆம் வகுப்பு பாடப்புத்தகம்

க்கம்45 -
மெல்ல மெல்ல மற
டாக்டர்ம்மா என்ன சொன்னாங்க..............என்று உல்லாசமாக சிரித்தான் கணவன்.

பக்கம் 46
ஆறுதல் சொல்ல போனாங்க ............வெறும் கழுத்தும் வெறிச்சோடிய நெற்றியுமாக...............................

இந்த மாதிரி பழம் கால சில ஆசாரங்களை கதையாக வடித்து பாடப்புத்தகம் வழியாக மாணவர்களுக்கு கொடுக்க எப்படி மனம் வருகின்றது என்று தான் விளங்கவில்லை.

இந்த புத்தக வடிவமைத்தலை ஆசிரியர்களிடம் கொடுக்காது இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ என்று தோன்றுகின்றது. உண்மையில் பல தமிழ் ஆசிரியர்கள், தமிழ் பேராசிரியர்கள் புத்தக வாசிப்பாளர்களாக இருப்பதில்லை.   ஒரு பேராசிரியருக்கு  புத்தகம் ஒன்று  வாசிக்க கொடுத்த போது "தப்பா நினைக்காதீங்க வாசிக்கும் பழக்கம் எனக்கு மிகவும் குறைவு" என்று புத்தகத்தை வாங்கவே மறுத்து விட்டார்.

திமுகாவினர்கள் எப்படி70 களில் ஆசிரியர்களாக  மாற்றப்பட்டு கொள்கை மாணவர்கள் மத்தியில் பரப்பப்பட்டதோ தற்போது பள்ளி புத்தகமாகவே அச்சிட்டு முயன்றுள்ளனர்.

 பல மாணாக்கள் ஆங்கிலம் படிப்பது தான் எளிது என்று எண்ணும் நிலைக்கு தள்ளி  விட்டுள்ளனர்.

14 Jul 2012

வகுப்பு 9 துணைப்பாடம்-மாமரம்

கதை இதுவே : ஒரு மனிதன் தண்ணீர் என்று முனங்கி கொண்டு சுருண்டு கிடைக்கின்றார். ஒரு  இளைஞன் தண்ணீர் கொண்டு கொடுக்கின்றார். பெரியவர் எழுந்து பக்கத்தில் இருக்கும் மாமர செடிக்கு பாதி தண்ணீரை ஊற்றி விட்டு மீதி தண்ணீரை குடித்து விட்டு இறந்து விட்டாராம்.

" உடலெ பள்ளி வாசலுக்குக் கொண்டுபோயி, குளிப்பாட்டி, புதுத்துணியெல்லாம் உடுத்தி, அடக்கம் பண்ணினோம். பெரியவரோட பபியில ஆறுநூபாய் இருந்திச்சு. நானும் அஸ்மாவும் ஆளுக்கு அஞ்சு ரூபா போட்டு மிட்டாய் வாங்கி பள்ளி குழந்தைகளுக்கெல்லாம் குடுத்தோம். பின்னாடி நான் அஸ்மாவெ கல்யாணம் பண்ணிகிட்டேன்..........

அப்புறம் அந்த மரத்திற்க்கு கதையில் வரும் பெண் பாத்திரம் தண்ணீர் ஊற்றி வளர்க்கின்றது. ஒரு கட்டத்தில் மரத்தை பிடுங்கி சாக்கு பையில் தன் அறை மூலையில் 4-5 நாட்கள் வைத்து விட்டு தோட்டத்தில் நட்டு வளர்க்கின்றனர்.


அந்த வீட்டிற்க்கு ஒரு விருந்தாளி வந்துள்ளார். அவர் கிளம்பும் போது வீட்டிலுள்ள 16 வயது மகன்"உங்க சம்சாரத்துக்கும் குழந்தைகளுக்கும் குடுக்க சொன்னாரு அப்பா."

இன்னும் கதைகள் உண்டு. இந்த கதை அதன் கதாப்பாத்திரம், தமிழ் பயன்படுத்து அழகு, கலாச்சார கோர்வை, நடைமுறை தமிழுக்கும் எழுத்து தமிழுக்குமுள்ள வேற்பாடுகள் பற்றி விவாதிக்க வேண்டியுள்ளது. திரைப்படங்களை விமர்சிப்பது போல் பாடப்புத்தகங்களை யாரும் விசாரிக்க போவது இல்லை என விளாசி தள்ளியுள்ளனர்.

இந்த கதைகளுக்கு பதிலாக ஒரு திரைவிமர்சனம்  எழுத சொல்லிக்கொடுத்திருக்கலாம்.

கடற்பயணம்-பக்கம் 64
ஒரே இடங்கள் பெயர்கள் கொண்ட விவரிப்பு. தமிழகத்தின் தற்காலைய துறைமுகங்களின்  நிலை பற்றியில்லை. வரலாறு தெரிவது நல்லதே அதற்க்கு என அப்பன் கட்டி வைத்த அரண்மனையை பார்த்தாலே பசி ஆறுமா? குலசேகரப்பட்டிணம் போன்ற துறைமுகங்கள் இன்றைய நிலை, மக்கள் வாழ்வு பற்றிய எந்த புரிதலும் இல்லை.

பாடமுடிவில்

கடல்சார் பயில்வோர்களுக்கு பயிற்ச்சியும் பணிவாய்ப்பும் நிரம்ப உள்ளன. பாரதி கண்ட கனவு நனவாகியுள்ளதாக முடித்துள்ளனர்.

அடுத்து அப்படியே 95 ஆம் பக்கம் வந்தால் " மொழிப்பற்றும் உடையவர் உணவு விடுதி, மருந்துக்கடை, துணிக்கடை முதலியன சிறிது தொலைவில் இருந்தாலும், விலை சிறுது கூடுதலாக இருந்தாலும் வேறு குறையிருந்தாலும், அங்கேயே சென்று வாங்கு" ...................

மொழி வழமையை வளர்ப்பது விடுத்து மொழி வெறி ஊட்டும் பாடங்கள் இடம்பெற்றுள்ளது நம் தலைமுறைக்கு செய்யும் துரோகம்!

உங்கள் கருத்துக்களை இட்டு செல்லுங்கள் உங்கள் மனநிலையும் அறிய ஆவலாக உள்ளேன். 

இன்னும் கதைப்போம்.

தமிழக தமிழ் மொழி பாடப்புத்தகம் 

தமிழக அரசு மலையாள மொழி புத்தகம்
 யார் உண்மையாக தமிழ் மொழி வளர்க்கின்றனர் என்று வாசித்து நாம் கருத்துரையாட வேண்டும்.
கேரளா அரசு பள்ளி தமிழ் புத்தகம் 1
தமிழ் மொழி -கேரளா அரசு பள்ளி பாடப்புத்தகம்-2
மலையாள மொழி -1





13 Jul 2012

என் மகன் எந்த வகுப்பில் படிக்கின்றான்?





என் மகன்  9 வகுப்பில் படிக்கின்றான் என்று நினைத்து கொண்டு இருந்தேன். ஆனால் கடந்த வாரத்தில் இருந்து இன்னும் சில புதிர்களை தூக்கி போட்டான். தனக்கு 10 வகுப்பு பாடவும் கற்பிக்கின்றார்கள் 10 ஆம் வகுப்பு புத்தகம் வேண்டும் என்பதாகவே இருந்தது. மெட்ரிக் பள்ளி பாடத்திட்ட புத்தகத்திற்க்கு என்றே 3980 ரூபாய் கட்டியுள்ளோம். . ஆனால் பள்ளியில் இருந்து கிடைத்ததோ சமச்சீர் பள்ளி பாடத்திட்ட புத்தகம். மொத்ததில் 21,800 ரூபாய் வாங்கியிருப்பதோ மெட்ரிக் பள்ளி பாடத் திட்டம் கற்பிக்க.

 9 ஆம் வகுப்பு பாடப்புத்தகம் சும்மா பெயருக்கும் மட்டும் தானாம். நடைமுறை  செயல்முறை படிப்புக்கு 10ஆம் வகுப்பு பாடபுத்தகம் வேண்டுமாம்.  கடைகளில் பழைய இருப்பு இல்லை என்று சொல்லி விட்டனர். இது ஒரு வழியில் சென்று கொண்டிருக்க   பழைய புத்தகம் கிடைக்குமா என்று உறவினர்கள் தெரிந்தவர்களிடம் கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.  இணையத்தில் கண்டு பிடித்து முதல் மாத வகுப்பு தேர்வுக்கான பகுதியை மட்டும் மறுபதிப்பு(print) எடுத்து  கொடுத்து விட்டேன். நேற்றைய தினம் 10 வகுப்பு பாடப்புத்தகம் கொடுத்து விட்டனர் என்றான்.


மகன் புத்தகப்பை 30 கிலோவுக்கு மேல் ஏறி விட்டது.  தினம் ஒரு மூட்டையை சுமந்து கொண்டு ஒரு தெரு தள்ளி பள்ளி வாகனம் பிடிக்க ஓடிவதை  மௌனமாக கண்டு களிக்க வேண்டியது தான்.வீட்டிலும் புத்தகம் அடுக்க ஒரு புது அலமாரை வேண்டும் போலுள்ளது.  9ஆம் வகுப்பு சமச்சீர், மெட்ரிக், 10 ஆம் வகுப்பு சமச்சீர் புத்தகம் 20 க்கு மேலான நோட்டு புத்தகங்கள் என புத்தக வியாபாரி போன்றுள்ளான்!

என் மகன் 9, 10 வகுப்புகளை ஒரே தலைச்சுமடாக சுமப்பதை கண்டு மனம் நொந்து  நானும் 9, 10 வகுப்பு வீட்டில் இருந்து படிக்க ஆரம்பித்து விட்டேன். ஐய்யோகோ..... கொடுமை கொடுமை.. தமிழில்  10 இயல். ஒவ்வொரு இயலிலும் இரண்டு பாடம், கவிதை, இலக்கணம், உபபாடக் கதை என நாலு பிரிவு. இந்த கவிதை பக்கங்கள் புறநானூறு, திருக்குறல் என்று ஒரு 14 வயது சிறுவனை எவ்வளவு தமிழால் வதக்க இயலுமோ அந்த அளவு வதைக்கும் படியாக உள்ளது. என்னதான் இனிப்பாக இருந்தாலும் திகட்டும் அளவு கொடுத்து வெறுக்க வைப்பது போல் தான் திருக்குரலை தினித்துள்ளனர். திருவள்ளுவரை திட்டாத மாணவர்களே இருக்க மாட்டார்கள். சரி பிள்ளைகள் உபபாடத்திலாவது சுவாரசியமான சிந்திக்க தகுந்த கதை படிக்கின்றார்களா என்றால் அது ஒரு பெரும் கொலைக்களம்.

இனி சமூகவியல் என்ற பாடங்கள் நோக்கினால் அதன் வடிவமைப்பே மிகவும் கேலிக்குரியது. சரித்திரத்தை வளைத்து உடைத்துள்ளனர்.  ஆங்கிலம் சொல்லவே வேண்டாம். ஆங்கிலத்தை ஆங்கிலமாக கற்று கொடுக்காது தமிழ் ஆங்கிலமாகத் தான் உள்ளது.
 எனக்கே சந்தேகம் வந்து விட்டது 9 என்ற படியில் கால் வைக்காது  பத்தாம்  வகுப்பில் தாவி சென்று 2 வருடம் படித்து குறுக்கு வழி வாழ்க்கை கற்று கொடுக்கின்றார்களா?

ஒன்றும் விளங்க வில்லை. இந்த அரசியலால் பெரியவர்கள் மட்டுமல்ல சிறியவர்களும் பலிகடாவாகி விட்டனர். 

இப்படி படித்து வரும் மாணவர்களிடம் கல்லூரி வகுப்புகளில் ஒரு சிறு கட்டுரை தமிழில் எழுதி  தர கூறும் போது ஒரு அழகும் இல்லாது  100 தவறுகளுடன் எழுதி தருவதை கண்டுள்ளேன்.

8 Jul 2012

ஜெ. ஷக்தி- அவள் முடிவும்!

முதல் பகுதி!  காலையில் நான் முன் வாசல் திறக்கும் போதே சக்தி வந்து  காத்து நிற்கின்றாள். அவள் அப்பாவின் இரண்டாவது மனைவி மகனையும் அழைத்து வந்திருந்தாள். அவள் வசிப்பது எங்கள் 3 தெருவு தள்ளியுள்ள குடிசைமாற்று குடியிருப்பில் தான்.

உண்மை தான் நாங்கள் 5 வருடம் முன்பு இங்கு வீடு கட்டிய போது சில வீடுகள் மட்டுமே இருந்தன.  இந்த குடிசை மாற்று குடியிருப்பு கூட ஒரு தமிழக மந்திரியின் கீழ் இருப்பதாகவும் இங்கு ஒரு கல்லூரி வர இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். ஒரு கல்லூரி வரவுள்ளது என்பது பக்கத்தில் குடியிருப்பவர்களுக்கு  பெருமையாகவும் இருந்தது .  ஒரு நாள் கட்டிட வேலை ஆரம்பித்தது. அரசு ஊழியர்கள் குடியிருப்பு என கூறினர், பின்பு இது அரசு கீழ்-நிலை ஊழியர் குடியிருப்பு என கூறி வந்தனர். சமீபத்தில்  குடியிருந்தவர்கள் கல்லூரி என சொன்னது பொய்யா என்று வாய் திறக்கும் முன் அடுத்த அறிவிப்பு வந்தது; இது குடிசை மாற்று வாரியம் என்று. காம்பவுண்டு வீட்டுக்காரர்கள் இந்த குடியிருப்பு தங்கள் பகுதிக்கு வருவதை ஆகும் மட்டும் எதிர்த்தார்கள். வழி இல்லை என கண்டவர்கள் வீட்டு சுற்று சுவர் உயரத்தை கூட்டி நல்ல நாயாக பார்த்து வளர்க்க ஆரம்பித்து விட்டனர்.

அரசு சொன்னது போல் இம்மக்களை இங்கு குடியமர்த்தியது இரண்டு வருடம் முன்பு.  இங்கு குடி வரக்கூடாது என்று இப் பகுதி சமீப மக்கள் எந்த அளவு எதிர்த்தார்களோ அதே போல்  இங்கு குடி வருவதில் துளி அளவும் விருப்பம் இருந்ததில்லை இவர்களுக்கும்.  அவர்கள் வாழ்வாதாரம் ஜங்ஷனை சுற்றியே   இருந்தது.  தாமிரை பரணி ஆற்றுக்கரையில் வீடு வைத்து குடியிருந்தவர்கள்.  இதில் பல மக்கள் லட்சம் செலவில் கட்டிய வீட்டை விட்டு வரும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். நடந்து அரசு பள்ளிக்கு போய் வந்த இவர்கள் பிள்ளைகள் பேருந்தில் பள்ளிக்கு சென்று வரப்பட்டனர். இம்மக்களும் தினம் குறைந்தது 24 ரூபாய் செலவாகியது வசிக்கும் இடத்திலிருந்து வாழ்வாதாரம் தேடி சென்று வர. மேலும் பெட்டி  போன்று கட்டியிருக்கும் வீடு அவர்களுக்கு பிடிக்கவே இல்லை. மூன்றாவது  மாடியில் குடியிருக்கும் முதியவர்கள் பெரும் அவதிக்கு உள்ளானர்கள். கோழி வளர்க்க ஆடு வளர்க்க தடை! அரசு வேப்பமரம் வைத்து கொடுத்துள்ளதாம்.  டவுண் சென்று வரவும் செலவு என்ற நிலையில் பக்கத்திலுள்ள வீடுகளில் துணி பாத்திரம் தேய்ப்பதே தங்கள் தொழிலாக வைத்திருந்தனர். சில பெண்கள் டவுணில் சென்று பூ வாங்கி வந்து கட்டி விற்றனர்.

இதில் இளைஞர்கள் முதியவர்கள் வெட்டி பேச்சுடன் அங்கு இருந்து காலம் தள்ளுவதையும்  காண இயன்றது. சில மக்கள் எங்கள் பகுதி மக்கள் அவர்களுடன் சகஜமாக கதைக்க விரும்பாததை கவலையுடன் குறிப்பிட்ட போது அதுவும் தங்களுக்கு பாதுகாப்பு தான் என்று மற்று சிலர் கூறி வந்தனர்.

இரண்டு நாள், இரண்டு குட்டி யானையில் சென்று ஆணையர் அலுவலக ஒப்புதலுடன் இரண்டு பேருந்தை கொண்டு வந்தனர் எங்கள் பகுதிக்கு. பேருந்து வந்து சேர இன்னும் பல வருடங்கள் ஆகும் என ஏங்கிய நாங்களும் மகிழ்ச்சியுடன் பேருந்தில் பயணிக்க ஆரம்பித்தோம். வீட்டிலுள்ள  தோட்டத்தில் பப்பாளி கொய்யப்பழம், சீத்தா, சப்போட்டா, நெல்லி என  இரக்கமில்லாது கொய்யப்பட்டாலும் சகித்து கொள்ள வேண்டி வந்தது. அவர்கள் குடியிருப்பு நாயை விரட்டுகின்றது என்ற காரணத்தால் எங்கள் தெரு நாய்கள் எல்லாவற்றிர்க்கும் ஒரே நாள் விஷம் வைத்து கொன்றது தான் மறக்க இயலாத துக்கமாக மாறியது.  இரவுகளில் அவர்கள் வீட்டு குழந்தைகளை தெருக்களை பொது கழிவிடமாக மாற்றுவதும் தெருவெல்லாம் குப்பையும் குளவுமாக எங்கள் பகுதி அடையாளம் கூட மாற்றப்பட்டும் விட்டது இந்த இரண்டு ஆண்டுகளில். காவலர்கள் நடமாட்டவும் அதிகரித்துள்ளது தற்போது. சில வேளைகளில் சண்டையிட்டு மண்டை உடைத்தவர்களை கூட்டி செல்ல ஆம்புலன்ஸுகளும் ஆரவம் எழுப்பி வந்து சென்றது.  இருந்தாலும் ஆள் அரவம் அற்ற எங்கள்  தெருவு பெண்களுக்கு சக்தி போன்ற பெண்கள் மிகவும் உதவியாக இருந்தனர்.

வந்ததும் கொடுத்த சிறு உணவை எடுத்து கொண்டு கிச்சு கிச்சு என்று வேலையை ஆரம்பித்து விட்டாள்.  தன் கதையையும் வரண்ட சிரிப்புடன் சொல்லி கொண்டே வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தாள். 8 ஆம் வகுப்பில் மூன்று முறை தோற்றதால் படிக்க வேண்டாம் என அவள் அப்பா சொல்லி விட்டாராம். ஜங்ஷனில் பல் பொடி கம்பனியில் பொதி நிறைக்கும் பணிக்கு சென்று வ்ந்தாளாம். காலை 9 முதல் இரவு மாலை 6 வரை வேலை இருக்கும் என்றும் அண்ணனும் கொத்தனாராக வேலை செய்வதால் வீட்டில் அடுப்பு ஊத பிரச்சனை இல்லை என்றும் சொல்லி கொண்டு வந்தாள். அவள் முதிர் வயதான பாட்டியும் வேலைக்கு செல்வதாகவும் தன்னை நன்றாக பார்த்து கொள்வதாகவும் தன் அப்பன் வேறு கல்யாணம் செய்து ஜங்ஷன் பக்கம் இருப்பதாகவும் கூறினாள்.

அவள் வேலை செய்யும் பாங்கு மிகவும் பிடித்திருந்தது எனக்கு. வேலையை ஒரு ஈடுபாட்டுடன் செய்தாள். காய்ந்த இலையும் கம்புமாக இருந்த முற்றம் தூய்மையாக மாறி விட்டது. என்னிடன் சில பழைய உடைகளும் வாங்கியவள் பக்கத்து வீட்டில் துணி துவைக்க தேவை என்றால் சொல்லி வைய்யுங்கள் என்று சொல்லி சென்றாள். நான் சிறிய பணம் கொடுத்த போது எனக்கு வேண்டாம் சைக்கிள் கிடைத்து விட்டதே என இன்முகத்துடன் மறுத்தாள். வற்புறுத்தி கையில் தினித்த போது வாங்கி கொண்டாள்.

ஒரு சில நாட்கள் பின் சைக்களுடன் தூரத்தில் வருவதை கண்டேன். ஷக்தி நலமா என்றதும் அக்கா நீங்கள் என் பெயரை மறக்கவில்லையா. சைக்கிளை பழுது பார்த்து விட்டேன். உங்களிடம் காட்டி விடலாம் என்றே வந்தேன். வாரக் கடைசி நாட்களில் வந்து துணி அலம்பி தருகின்றேன் என்று சொல்லி சென்றவள் சில வாரங்களில்  சொன்னது போல் வந்து வேலையும் செய்து தந்து சென்றாள்.

பின்பு பல மாதங்களாக காணாது இருந்ததால் எங்கள் வீட்டு முற்றவும் குப்பையாக காட்சியளிக்க; பூக்கார அக்காவிடம் ஷக்தியை தெரியுமோ என்ற போது உங்களுக்கு தெரியாதா அவளை போலிஸ் பிடித்து சென்று விட்டது. லோக்கல் தொலைகாட்சியில் பார்க்கவில்லையா அவள் 3 நபர்களுடன் பிடிக்கப்பட்டாள் என்றார். எனக்கு ஆச்சரியம் எப்படி இப்பிள்ளை இந்த சூழலில் விழுந்தது. அந்த குடியிருப்பில்  இந்த தொழில் செய்பவர்கள் வசிப்பதையும் சில பெண்கள் கந்து வட்டிக்காரர்களிடம் மாட்டி கொண்டு தவிப்பதையும் நேரிலே கண்டுள்ளேன். ஆனால் ஷக்தி போன்ற வேலையில் ஈடுபாடுள்ள பெண் எப்படி மாட்டினாள் என்று ஆயிரம் கேள்விகள்.  அக்கா, நேரம் பிந்தினால் பாட்டி தேடுவாள்  கிளவி கண்டமேனிக்கு திட்டுவா என்று சொல்லி சிரித்து கொண்டிருந்தாளே என்று என் மனம் பதறியது.

அவளை மறந்து விட்ட நிலையில் பல மாதங்கள் பின்  ஷக்தி போன்றே ஒரு சின்ன பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள். உற்று நோக்கிய போது ஓ ஷக்தி தான் தலை கிராப் வெட்டி நவீன உடையுடன் சிரித்து கொண்டே வந்து கொண்டிருந்தாள். என்னம்மா நிறைய நாட்களாக காணவில்லையே என்ற போது  அக்கா பின் தலையில் அறுவை சிகித்சை, திருவனந்தபுரத்தில் சிகித்சையில் இருந்தேன் என்றாள். இப்போது கண் புருவம்  வில்லாக வளைத்து வெட்டப்பட்டிருந்தது.  பழைய ஷக்தி அல்லாது புது ஷக்தியாக தெரிந்தாள். ஆனால் கண்ணில் ஒரு சோகம் நிழலாடியது கண்டேன். உன்னை பற்றி கேள்வி பட்டேன் என்று அவளிடம் கேட்க மனம் வரவில்லை. இருந்தும் சிறிய மனக்குழப்பம் பயம்.  ஆனால் அவளோ  வேலை இருந்தால் செய்து தருகின்றேன் என்றாள். இந்த முறை துணி துவைத்து தந்தவள் பழையது போல் ஈடுபாடாக செய்யவில்லை அவ்வளவாக பேசவும் இல்லை.   வாரம் கடைசி நாள் வந்து பணம் வாங்கி கொள்கின்றேன் என்று சொல்லி சென்றவள் பின்பு வரவே இல்லை.

ஒரு நாள் முச்சந்தியில் வைத்து பார்த்தேன். ஒரு நாள்  குடியிருப்பில் கொட்டடி சத்தம் கேட்டதும் என்ன என விசாரித்த போது ஷக்தி என்ற ஒரு சிறு பெண்ணை அவள் அப்பன் அடித்து கொன்றுவிட்டான் என்றார் பூக்காரி !




7 Jul 2012

நன்றி வணக்கங்களுடன் - பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

 ஒவ்வொரு வருடவும் ஒவ்வொரு கனவுகள் நிறைவுகள். அவ்வகையில் இந்த  வருட பிறந்த நாள் சற்று பெரிய மனதாங்கலுகளுக்கு மத்தியில் துவங்கியது. "வடை போச்சே"ன்னு காக்கா அழுதது போன்று  அந்த  நரியின் கொடிய நினைவுகள் மத்தியில் இந்த பிறந்த நாள் கடந்து வந்தது.

காலை 7.30 வரும் பள்ளி வாகனத்தை பிடிக்க வேண்டிய இளைய மகன்; "இன்று உங்கள் பிறந்த நாள் போன்றே எனக்கு தெரியவில்லை. நீங்கள் என் நண்பர்களுக்கு மிட்டாய் வாங்கி தரவில்லை" என்றான். தம்பி  உங்களை போன்ற குழைந்தைகள்  தான் கொண்டாடுவார்கள் அடுத்த வாரம்  உன் பிறந்த நாளை கொண்டாடுவோம். மாலை பள்ளி விட்டு வந்ததும் உனக்கு பிடித்த ஐஸ்கிரீம் வாங்கி தருகின்றேன் என்று சமாதானம் கூறி ஒரு முத்தம் கொடுத்து அனுப்பினாலும் முகத்தில் தெளிவில்லாது திருப்தி இல்லாதே சென்று கொண்டிருந்தான். 

பெரியவர் இன்னும் முரட்டு பிடியாக நான் இன்று சாம்பார் கொண்டு போக இயலாது  நல்ல  கறி வைத்து தாருங்கள் என்று கூறி கொண்டிருந்தான். ஆகா...... அவனுக்கும் கறி ரெடியாகி விட்டது. அவன் பள்ளி  வாகனம் ஓட்டிக்கு வீட்டு முன் வந்து செல்ல வசதியில்லையாம் ஆகையால் ஒரு தெரு நடந்து சென்றே  வாகனத்தை பிடிக்க வேண்டும். 

பிள்ளைகள் அனுப்பி விட்டு அத்தானுக்கும் காலை சாப்பாடு எடுத்து கொடுத்தாலும் மனதில் ஒரு நிம்மதி இன்மை, வருத்தம், பின் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. கடந்த மே 4 தேதிகளில் துவங்கிய மனப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வர எடுத்த சில என் நீக்கங்கள் தவறாக எடுக்கப்பட்டு  நான் எதிர்பாராத சில இழப்புகளை சந்திக்க வேண்டியாகி விட்டது. கடந்த 60 நாட்களில் என்ன எல்லாம் மாற்றங்கள் வாழ்க்கையில். ஒரு நேர்முகம், வெற்றி, கலகம், உடன் தோல்வி.......நினைத்து பார்க்க பார்க்க விடை தெரியாத கேள்விகளும் வெறுப்பும்  தான் இருந்தது. 

எல்லா வருடவும் ஆலயம் சென்று வணங்கி வரும் நான், இந்த வருடம் ஆற்றலற்று வீட்டிலிருந்தே கடவுளை நினைத்து கொண்டேன்.  எந்த இடத்தில் தவறு நிகழ்ந்துள்ளது எனக்கு பிடிபட வில்லை.  என் வேலையில் மட்டும் தான் கவனமாக இருந்தேன். அவர் வழியிலே நான் குறுக்கிடவில்லையே. வாழ்க்கை நுணுக்கங்களை, வாழும் கலையை கற்று கொள்ளும் முன் ஒவ்வொரு பிறந்த நாளாக வந்து செல்கின்றதே என்ற வருத்தவும் என்னை விட்ட பாடில்லை.

புதுத்துணி வாங்கி கொடுத்தும் முகம் தெளிவில்லையே என்று கண்ட  கணவர் தன்னுடன் வெளியில் வர  அழைத்தார். உடன் கிளம்பி விட்டேன்.  இப்போது அவருடன் சில தூரம் பயணிப்பது தான் சில சிந்தனைகளை விலக்க உதவுகின்றது. எனக்கு பிடித்த புத்தகக் கடைக்கு தான் அழைத்து சென்றார். நிறைய புத்தகங்கள் குவிந்து கிடந்தன.  அப்போதிருந்த  மனநிலையில் ஓஷோவின் 'எதிர்ப்பிலேயே வாழுங்கள்' என்ற புத்தகம் தான்  என்னை கவர்ந்தது. 

கடந்த 6 மாதமாக நான் எதிர்க்காமலே கொடும் எதிர்ப்பிலயே வாழும் சூழல். ஏன் அந்த நபர் என்னை எதிர்த்தார் என எனக்கு பிடிபடவில்லை.  அவர் எதிர்ப்பு என் அமைதியான மனநிலையை பாதித்து கொண்டே இருந்தது.  பல வருட கனவு வேலை, மிகவும் பிடித்த வேலை செய்யும் சூழல், பண்பான அதிகாரிகள் ஆனால் என்னுடன் வேலை செய்யும் பெண்ணால் முதல் நாளே புரக்கணிக்கப்படுகின்றேன். "உங்களுக்கு வேலை கொடுத்ததே செல்லுபடியாகாது பாவம் உங்களை நினைத்து தான் சும்மாதிருக்கின்றேன் இல்லை என்றால் முதல்வரிடம் சென்று உங்களை துரத்தி விடுவேன்". என்றார். எனக்கு இதன் உள்நோக்கம் புரியவில்லை பதில் சொல்லவும் விளையவில்லை. ஆனால் நீங்கள், உங்கள் என்ற வார்த்தைகள் ஆறு மாத முடிவில் இது.. அது..என்று மாறிவிட்டது. என்னை திட்டி கொண்டிருக்க என்னுடன் பணி செய்பவர்கள் அதை கேட்டு கொண்டிருக்க, நான் தொலைகாட்சி செய்தி காண்பது போல் அந்த நபர் முகத்தை பார்த்து கொண்டே இருந்தேன். முறையிட்ட அதிகாரியும் இதை பெரிது படுத்த வேண்டாம் என்ற போது   இதை பதிவு செய்து அதினும் மேல் அதிகாரியிடம் முறையிடவும் தோன்றவில்லை எனக்கு!


ஆனால் இந்த வேலைக்கும் என் கனவுகளுக்கும் 20 வருட பழக்கம் இருந்தது. அன்று 11ஆம் வகுப்பு கல்லூரியில் தான் நாங்கள் கற்றோம். மோனாம்மா என்ற பேராசிரியரை கண்டது முதலே என் பேராசிரியை கனவும் சேர்ந்து வளர்ந்தது.  மேல் படிப்புகாக வீட்டில் அனுமதி கேட்டதும் நல்ல மாப்பிள்ளை இப்போது வந்துள்ளார், "உங்கள் விருப்பதிற்க்கு நாங்கள் இருந்து விட்டு  பின்னால் வருத்தப்பட இயலாது. போகிற வீட்டில் ஆசை உள்ளவர்கள் படியுங்கள்", என்று சொல்லி விட்டார்கள். பின்பு வாழ்க்கை நினைத்து பார்க்காத திருப்பங்களை தந்து விட; விட்ட படிப்பை பிடிக்க சிறிய மகன் முதல் வகுப்பு போகும் மட்டும் காத்திருக்க வேண்டி வந்தது.  அவர்கள் பள்ளியில் சென்ற போது நான் பல்கலைகழகம் நிதம் 2 மணி நேரம் பயணித்து  3 வருடத்தில் படிப்பை முடித்து என் வாழ் நாள் லட்சியத்தை அடைந்தேன்.   என் வாழ்க்கைக்கு  நல்ல சில அர்த்தங்கள் கொடுத்த வேலை இது. 

ஆக்கபூர்வமான  சேவை செய்ய வாய்ப்பு தந்த வேலை என்பதால் இந்த சிறுபிள்ளைத் தனமான "இரு பெண்கள் பொறாமை சண்டை" என மற்றவர்களால் அழைக்கும்  இந்த வழக்கை சண்டை சச்சரவு என்று இழுக்காது முகநூல் வழியாக உங்களுக்கும் எனக்கும் புரிதல் தேவை  என்று மிகவும் மனித நேயத்துடன்  மிகவும் பண்புடன் சகமனிதையாக கேட்டு கொண்டதையே ஒரு பெரும் ஒழுக்க பிரச்சனையாக மாற்றி எனக்கு முட்டுகட்டை இட்டு தன் மனநோயால் வந்த ஆக்ரோஷத்தை  தனித்து கொண்டுள்ளார் அந்த பெண்.


 முகநூலை மிகவும் ஆபத்தான ஆபாசமாக பார்க்கும் அவளுடைய பார்வையில்  சிலுவையில் அறைய கொண்டு போகும் முன் யேசு நாதரிடம் "உண்மை என்றால் என்ன " என்று கேட்ட போது அமைதி காத்த அதே சூழலில் நானும் தள்ளபப்ட்டு விட்டேன் என்று புரிந்து விட்டது.  இனி என் நியாயங்கள் எண்ணங்கள் எடு பட  போவதில்லை என்பதும் தெரியும். 

வாய் சண்டை இடுபவளிடம் வார்த்தைகளால் ஏன் நட்பு பேணக்கூடாது என்று விளையாட்டாக எடுத்த முடிவு வினையில் முடிந்ததா அல்லது உலக சூக்சுமம் அற்ற என் போக்கு  என்னை துயரில் ஆழ்த்தியதா என இன்னும் விளங்க வில்லை. விசாரணை செய்யாது,  என் நிலை எடுத்து சொல்லும் வாய்ப்பு தராது தண்டிக்கப்பட்டுள்ளேன். 

என் நண்பர்கள் எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் என் மனம் இந்த பிறந்த நாள் அன்று மிகவும் துன்புற்று தான் இருந்தது. பாவி செல்லுமிடம் பாதாளம் என்பது போல் இணையவும் சரியாக கிடைக்காது இருந்த நேற்றைய தினம் அதி காலை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ரத்தின வேல் ஐயா தொலைபேசியில் வாழ்த்துக்கள் அளித்தார்கள். என் நலனில் பெரிதும் விரும்பி நோக்குபவர் ஐயா. பல அரிய புத்தகங்கள் வாசிக்க சொல்லி அனுப்பி தந்துள்ளார். என் ஒவ்வொரு நடைவடிக்ககளும் ஒரு பொறுப்புள்ள தகப்பனாக இருந்து வழி நடத்துபவர்.  காலை 11 மணிக்கு சுவிஸ்லிருந்து ஸ்ரீ அண்ணா தொலைபேசியில் வாழ்த்து சொல்லி மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்தியது மனதிற்க்கு ஆறுதல் கொடுத்தது.  இந்த வருடம் வர இருக்கும் "நான் சொல்வதெலாம் உண்மை "என்ற புத்தகம் வெளியிட பெரிதும் உருதுணையாக வழிகாட்டியாக இருப்பவர் என் சகோதரரும் தோழரும் புத்தக ஆசிரியருமான  ஸ்ரீ கந்தராஜா கங்கைமகன்.

 இரவு லண்டனில் இருந்து சுபி அக்காள் "ஓ அந்த விடயத்தை தள்ளி குப்பையில் போடுங்கள், பழையது பழையதாக இருக்கட்டும் புதியவையை பற்றி சிந்திக்கள்" என்று அழுத்தி கூறி என் மனப்போராட்டத்திற்க்கு முற்று புள்ளி வைத்தார்.  தூங்க செல்ல இருந்த வேளையில்  லண்டனில் குடியிருக்கும் ஈழ சகோதரி ஜமுனா நதி அக்காள்  "நீங்கள் கடந்ததை விடுத்து வருவதை எண்ணுங்கள், உங்களால் முடியும் என வாழ்த்திய  போது இன்னும் நம்பிக்கை பிறந்தது நல்ல நல்ல மனித உறவில் மனித வாழ்வில். 

இன்று காலை முகநூல்  சுவர் பக்கம் வந்த போது தான் முகநூல் உள் பெட்டி வழியாக 99 என் நண்பர்கள் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தனர். ஸ்ரீ வில்லிபுத்தூர் ரத்தினவேல் ஐயா சுவரில் 166 விருப்பங்களுடன்  115 வாழ்த்துக்கள் பெற்றதை கண்டு மகிழ்ச்சியுற்றேன்.  நோர்வேயில் வசிக்கும் சகோதரர் மற்றும் நண்பர் பத்மன் அண்ணா சுவர் வழியாக  73 விருப்பங்களுடன் 35 வாழ்த்துக்களும் பெற்ற நான் இன்று சாம்பலில் இருந்து உயிர்த்து எழுந்து மேல் நோக்கி பறந்த பீனிக்ஸ் பறவை போல் உணர்கின்றேன்.

நான் எதிர்ப்பில் மட்டுமல்ல அல்ல வாழ்கின்றேன் அதை விட நட்பு, பாசம், பண்பானவர்கள் மத்தியில் வாழ்கின்றேன் என்ற மகிழ்ச்சியில்  என்னை வரவேற்க்க இன்னும் நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றது என்று அகமகிழ்ந்து தங்கள் ஒவ்வொருவருக்கும் என் அன்பான நன்றி வணக்கங்கள் தெரிவித்து கொள்கின்றேன்.
முகநூல் வாழ்த்துக்கள்!
பத்மர் அண்ணா வாழ்த்துக்கள்! 


T.s. Kandaswami அன்பை அணையாக்கி. ஒழுக்கமெனும் நீர் தேக்கி, இன்முக வாய்க்கால் வழி, பரிவு எனும் அமுதூட்டி,சுற்றத்தையும் நட்பையும் பேணிப்பாதுகாக்கும் திருமகளே, பல்லாண்டு பல்லாண்டு உலகு போற்ற வாழ்வாயம்மா !!

3 Jul 2012

J.ஷக்தி- புதிரான மனிதர்கள்!

வாழ்க்கை நெடுக சம்பவங்கள் போன்றே பல புரியாத புதிரான மனிதர்களும் நம்மை கடந்து செல்கின்றனர்.   அது போல்   அன்பு, பாசம், துயர், வெறுப்பு, என ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணர்வினை தந்து செல்கின்றனர்.  அவ்வழியில் சமீபத்தில் என்னை சிந்தனையில் ஆழ்த்தியவள் ஜெ குடியிருப்பில் வசிக்கும் ஷக்தி என்ற 14 வயது இளம் பெண் சிறுமி!.

அவள் அறிமுகம் ஆகினதே  முற்றிலும் அறிமுகமே இல்லாத சூழலில். ஒரு நாள் வந்து என்னிடம் கேட்டாள் அக்கா உங்கள் வீட்டில் பயன்படுத்தாது 2 சைக்கிள் உண்டாமே.  அந்த வீட்டிலுள்ள பாட்டி சொன்னார்கள்.  எனக்கு ஒரு சைக்கிள் தந்தால் உதவியாக இருக்கும்.

எனக்கு இந்த பக்கத்து வீட்டு மூதாட்டியிடம் என்றுமே ஒரு குறையுண்டு.  ஒரு வித ஈனப்பிறவி. எந்த மனிதனும் மூதாட்டியின் புரணியில் இருந்து தப்பித்து கொள்வதில்லை. ஒரே புரணி. புகைச்சில் பிடித்த பெண்மணி.  அறுத்த கைக்கு சுன்னாம்பு கொடுக்காதவள், ஆனால் தன் பேச்சு  ஆற்றலால் ஊருக்கே பந்தல் போட்டு பந்தி வைத்து விடுவார்.

எம்மா....... உன்னை, என் மக மாதிரி நினைத்து சொல்லுதேன்,  ஆமா என் வயசுக்கான பேச்சான்னு நினைத்து விடாதே ...ஆனால் நேற்று மதியம் அந்த வீட்டில் ஒரு குண்டன் போனான்,  இவள் வீட்டுக்காரன் வீட்டு சன்னல் வழியாகத் தான் உச்சா போகிறான், அந்த வீட்டுல அப்பனை மகளை கொண்டு போய் விடுகின்றான்,  நேற்று எங்க பின் வீட்டுல, புருசனை பொண்டாட்டி மாட்டை வெளுப்பது போல் வெளுத்து விட்டாள் என்ற கதைகள் கற்பனை, எகத்தாளம் எல்லாம் கலந்து போய் கொண்டே இருக்கும்.  எங்கள் தெருவில் ஒவ்வொரு வீடு சந்திக்கவும் ஒவ்வொரு நேரம் வைத்திருந்தார் இந்த மூதாட்டி. அதில் எங்க வீட்டுக்கு வரும் நேரம் தான் எனக்கு பிடிக்காத நேரம். பிள்ளைகள் பள்ளியில் இருந்து வரும் நேரம் வந்து விட்டு மாலை சாயா, பலகாரம் சாப்பிட்டு அப்படியே கதைக்க  ஆரம்பித்தால் ஒரு நெடும் தொடர் போல் போய் கதை கொண்டே இருக்கும்.  இந்த கதையை ஒரு வழியாக முடிக்க வைத்ததால், மூதாட்டியும் கொஞ்சம் நாளாக எங்கள் வீட்டு பக்கம் வராது எதிர் வீட்டில் இருந்து எங்கள் வீட்டை நோட்டம் இடுவதை தான் கண்டுள்ளேன். மாமர மூட்டில் சாத்தி வைத்திருக்கும் சைக்கிள் கிளவி கண்ணில் எப்படி பட்டது என மனதில் கேட்டாலும் வந்து  கேட்கும் பிள்ளையின் முக பாவம்; 'இல்லை' என்று சொல்ல தோன்றவில்லை. மேலும்  சைக்கிளின்  தேவை  என்னை விட பல மடங்கு அதிகமாக இருந்தது அவளுக்கு என்று தோன்றியது.

பிள்ளைகளுக்கு  சைக்கிள் வேண்டும் என ஒரே பிடிவாதம். இளையவனுக்கு ஒரு பழைய சைக்கிள் கடையில் இருந்து வாங்கி கொடுத்து விட்டாச்சு. பெரியவருக்கு மேலும் கோபம், அவனுக்கு மட்டும் சைக்கிள், நான் உங்க பிள்ளையாக தெரியவில்லையா என்று பெரிய பெரிய கேள்வி எல்லாம் கேட்கின்றான்.

  தமிழகத்தில் வருடம் ஒரு முறை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு இலவச சைக்கிள் கொடுப்பது உண்டு.  அது பள்ளி தொடங்கி 6 மாதம் பின்பு தான் பல அறிக்கைகள் கொடுத்த பின்பு பள்ளி குழந்தைகள் கைகளில் கிடைக்கும்.  10, 11 வகுப்பு பிள்ளைகளுக்கு என்பதால் சில நேரம் தொடர்ந்து  இரண்டு வருடவும் சைக்கிள் கிடைக்கும்.  வீட்டில் 2 குழந்தைகளுக்கு மேல் உண்டு  கிடைத்த சைக்கிள் தேவை இல்லை என்று கருதினாலோ அல்லது குடிக்கார தகப்பனோ வீட்டில் கிடக்கும் சைக்கிளை பழைய கடையில் விற்று விடுவார்கள். அப்படி தான் புதிதான ஒரு அரசு பள்ளி சைக்கிள்  ஒன்று பழைய சைக்கிள் கடையில் இருந்து வாங்க இயன்றது.

சைக்கிளை கொண்டு வந்து 3 வாரம் தான் ஓட்டியிருப்பான்.  2 வீடு தள்ளியிருக்கும்  அரசு வாகன சாரதியின் மகள் "அத்தை  ரேஷன் வாங்க போக உங்க வீட்டு சைக்கிளை  தருவீர்களா"  என்றாள்.  அவ வீட்டிலும் 2 சைக்கிள் பார்த்துள்ளேன். ஆனாலும் ஒரு சைக்கிள் கொடுத்து உதவுவதிலுன் நாலு கேள்வி கேட்கக்கூடாது என்பதால் எடுத்து விட்டு போக சொல்லி விட்டேன்.  அவள் திருப்பி சைக்கிளை கொண்டு வந்ததும் "அந்த தூண் பக்கம்  சாத்தி வைத்து விட்டு போம்மா" என்று கூறிவிட்டு நான் என் வேலையில் ஆழ்ந்து விட்டேன்.

பள்ளி விட்டு வந்த மகன் சைக்கிள் எடுத்து இரண்டு முறை ஓட்டி வந்தவன் அம்மா சங்கிலி அறுந்து விட்டது என்று சைக்கிளை படுக்க வைத்து பழுது பார்த்து கொண்டிருந்தான். அப்போது தான் கவனித்தோம் எங்கள் சைக்கிள் சங்கிலி கழற்றப்பட்டு ஒட்டப்பட்ட ஒரு சங்கிலி மாட்டப்பட்டுள்ளது.  ஆகா பகல் கொள்ளையல்லவா நடந்துள்ளது.  இனி போய் அவளிடம் சண்டை போட்டு நம் வாயை அசிங்கப்படுத்தவா என்று என் கைகாசு போட்டு ஒரு சைக்கிள்  சங்கிலி மாற்றி கொடுத்து விட்டேன்.

ஆனால் எங்கள் பிள்ளைகளை சைக்கிளை எடுத்து கொண்டு காடு மேடாக சுற்றுகின்றனர். ரோட்டோர பள்ளத்தில் விட்டு விளையாடுகின்றனர்.  குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் மாற்றி விட்டனர் சைக்கிளை!  சைக்கிள் பழுது பார்க்க வேண்டிய தொகையை எழுதி தந்தனர்.  தலையே சுற்றியது.  அந்த சைக்கிள் அப்படியே கவனிப்பாரற்று தெக்கு மூலைத் தென்னைக்கு கூட்டாக பல மாதங்களாக சாய்ந்து நின்று விட்டது.


ஷக்தி வந்து கேட்ட போது தான் சைக்கிள் மவுஸு தெரிகின்றது.  அவளுக்கு அம்மா இல்லையாம். அப்பன் ஒரு முழுக்குடிகாரனாம் மேலும் ஒரு பெண்டாட்டியை கட்டி கொண்டு இன்னும் சில குழந்தைகளை பெற்று கொண்டு பக்கத்து தெருவில் இருக்கானாம்.  இவளும் இவள் அண்ணனும் அம்மா வழி பாட்டியுடன் புதிதாக கட்டியிருக்கும் 'குடிசை மாற்று குடியிருப்பில்' குடி வந்துள்ளார்களாம்.

அவள் கொஞ்சம்  நேரம் பேசி கொண்டே இருந்தாள்.  பாட்டியும் வீட்டு வேலைக்கு போவாளாம்.  இவள் திருநெல்வேலி ஜங்ஷனில் கம்பனியில் பொதி நிரப்ப போவாளாம்.  இங்கு வந்ததால் வேலையற்று போய் விட்டது என்றும் இந்த சைக்கிள் தந்தால் பெருமாள் புரத்திலுள்ள சில வீடுகளுக்கு பாத்திரம் துணி, துவைத்து கொடுக்க போவதாக கூறினாள்.

எனக்கும் சைக்கிளை இனாமாக கொடுக்க விருப்பமில்லை.  இனாமாக கிடைக்கும் பொருட்களுக்கு மதிப்பு இருக்காது என்ற எண்ணமே காரணம். நான் அவளிடம், உனக்கு இந்த சைக்கிளை இனாமாக நான் தர வேண்டாம்  சைக்கிளுக்கு பதிலாக வீட்டை சுற்றி பெருக்கி தந்து விட்டு எடுத்து செல் என்றேன். அவளும் முழுச் சம்மததுடன் காலையில் வெயில் வரும் முன் வந்து விட்டு செல்வதாக சொல்லி சென்றாள்.


தொடரும்................................. முடிவு!