8 Jul 2012

ஜெ. ஷக்தி- அவள் முடிவும்!

முதல் பகுதி!  காலையில் நான் முன் வாசல் திறக்கும் போதே சக்தி வந்து  காத்து நிற்கின்றாள். அவள் அப்பாவின் இரண்டாவது மனைவி மகனையும் அழைத்து வந்திருந்தாள். அவள் வசிப்பது எங்கள் 3 தெருவு தள்ளியுள்ள குடிசைமாற்று குடியிருப்பில் தான்.

உண்மை தான் நாங்கள் 5 வருடம் முன்பு இங்கு வீடு கட்டிய போது சில வீடுகள் மட்டுமே இருந்தன.  இந்த குடிசை மாற்று குடியிருப்பு கூட ஒரு தமிழக மந்திரியின் கீழ் இருப்பதாகவும் இங்கு ஒரு கல்லூரி வர இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். ஒரு கல்லூரி வரவுள்ளது என்பது பக்கத்தில் குடியிருப்பவர்களுக்கு  பெருமையாகவும் இருந்தது .  ஒரு நாள் கட்டிட வேலை ஆரம்பித்தது. அரசு ஊழியர்கள் குடியிருப்பு என கூறினர், பின்பு இது அரசு கீழ்-நிலை ஊழியர் குடியிருப்பு என கூறி வந்தனர். சமீபத்தில்  குடியிருந்தவர்கள் கல்லூரி என சொன்னது பொய்யா என்று வாய் திறக்கும் முன் அடுத்த அறிவிப்பு வந்தது; இது குடிசை மாற்று வாரியம் என்று. காம்பவுண்டு வீட்டுக்காரர்கள் இந்த குடியிருப்பு தங்கள் பகுதிக்கு வருவதை ஆகும் மட்டும் எதிர்த்தார்கள். வழி இல்லை என கண்டவர்கள் வீட்டு சுற்று சுவர் உயரத்தை கூட்டி நல்ல நாயாக பார்த்து வளர்க்க ஆரம்பித்து விட்டனர்.

அரசு சொன்னது போல் இம்மக்களை இங்கு குடியமர்த்தியது இரண்டு வருடம் முன்பு.  இங்கு குடி வரக்கூடாது என்று இப் பகுதி சமீப மக்கள் எந்த அளவு எதிர்த்தார்களோ அதே போல்  இங்கு குடி வருவதில் துளி அளவும் விருப்பம் இருந்ததில்லை இவர்களுக்கும்.  அவர்கள் வாழ்வாதாரம் ஜங்ஷனை சுற்றியே   இருந்தது.  தாமிரை பரணி ஆற்றுக்கரையில் வீடு வைத்து குடியிருந்தவர்கள்.  இதில் பல மக்கள் லட்சம் செலவில் கட்டிய வீட்டை விட்டு வரும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். நடந்து அரசு பள்ளிக்கு போய் வந்த இவர்கள் பிள்ளைகள் பேருந்தில் பள்ளிக்கு சென்று வரப்பட்டனர். இம்மக்களும் தினம் குறைந்தது 24 ரூபாய் செலவாகியது வசிக்கும் இடத்திலிருந்து வாழ்வாதாரம் தேடி சென்று வர. மேலும் பெட்டி  போன்று கட்டியிருக்கும் வீடு அவர்களுக்கு பிடிக்கவே இல்லை. மூன்றாவது  மாடியில் குடியிருக்கும் முதியவர்கள் பெரும் அவதிக்கு உள்ளானர்கள். கோழி வளர்க்க ஆடு வளர்க்க தடை! அரசு வேப்பமரம் வைத்து கொடுத்துள்ளதாம்.  டவுண் சென்று வரவும் செலவு என்ற நிலையில் பக்கத்திலுள்ள வீடுகளில் துணி பாத்திரம் தேய்ப்பதே தங்கள் தொழிலாக வைத்திருந்தனர். சில பெண்கள் டவுணில் சென்று பூ வாங்கி வந்து கட்டி விற்றனர்.

இதில் இளைஞர்கள் முதியவர்கள் வெட்டி பேச்சுடன் அங்கு இருந்து காலம் தள்ளுவதையும்  காண இயன்றது. சில மக்கள் எங்கள் பகுதி மக்கள் அவர்களுடன் சகஜமாக கதைக்க விரும்பாததை கவலையுடன் குறிப்பிட்ட போது அதுவும் தங்களுக்கு பாதுகாப்பு தான் என்று மற்று சிலர் கூறி வந்தனர்.

இரண்டு நாள், இரண்டு குட்டி யானையில் சென்று ஆணையர் அலுவலக ஒப்புதலுடன் இரண்டு பேருந்தை கொண்டு வந்தனர் எங்கள் பகுதிக்கு. பேருந்து வந்து சேர இன்னும் பல வருடங்கள் ஆகும் என ஏங்கிய நாங்களும் மகிழ்ச்சியுடன் பேருந்தில் பயணிக்க ஆரம்பித்தோம். வீட்டிலுள்ள  தோட்டத்தில் பப்பாளி கொய்யப்பழம், சீத்தா, சப்போட்டா, நெல்லி என  இரக்கமில்லாது கொய்யப்பட்டாலும் சகித்து கொள்ள வேண்டி வந்தது. அவர்கள் குடியிருப்பு நாயை விரட்டுகின்றது என்ற காரணத்தால் எங்கள் தெரு நாய்கள் எல்லாவற்றிர்க்கும் ஒரே நாள் விஷம் வைத்து கொன்றது தான் மறக்க இயலாத துக்கமாக மாறியது.  இரவுகளில் அவர்கள் வீட்டு குழந்தைகளை தெருக்களை பொது கழிவிடமாக மாற்றுவதும் தெருவெல்லாம் குப்பையும் குளவுமாக எங்கள் பகுதி அடையாளம் கூட மாற்றப்பட்டும் விட்டது இந்த இரண்டு ஆண்டுகளில். காவலர்கள் நடமாட்டவும் அதிகரித்துள்ளது தற்போது. சில வேளைகளில் சண்டையிட்டு மண்டை உடைத்தவர்களை கூட்டி செல்ல ஆம்புலன்ஸுகளும் ஆரவம் எழுப்பி வந்து சென்றது.  இருந்தாலும் ஆள் அரவம் அற்ற எங்கள்  தெருவு பெண்களுக்கு சக்தி போன்ற பெண்கள் மிகவும் உதவியாக இருந்தனர்.

வந்ததும் கொடுத்த சிறு உணவை எடுத்து கொண்டு கிச்சு கிச்சு என்று வேலையை ஆரம்பித்து விட்டாள்.  தன் கதையையும் வரண்ட சிரிப்புடன் சொல்லி கொண்டே வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தாள். 8 ஆம் வகுப்பில் மூன்று முறை தோற்றதால் படிக்க வேண்டாம் என அவள் அப்பா சொல்லி விட்டாராம். ஜங்ஷனில் பல் பொடி கம்பனியில் பொதி நிறைக்கும் பணிக்கு சென்று வ்ந்தாளாம். காலை 9 முதல் இரவு மாலை 6 வரை வேலை இருக்கும் என்றும் அண்ணனும் கொத்தனாராக வேலை செய்வதால் வீட்டில் அடுப்பு ஊத பிரச்சனை இல்லை என்றும் சொல்லி கொண்டு வந்தாள். அவள் முதிர் வயதான பாட்டியும் வேலைக்கு செல்வதாகவும் தன்னை நன்றாக பார்த்து கொள்வதாகவும் தன் அப்பன் வேறு கல்யாணம் செய்து ஜங்ஷன் பக்கம் இருப்பதாகவும் கூறினாள்.

அவள் வேலை செய்யும் பாங்கு மிகவும் பிடித்திருந்தது எனக்கு. வேலையை ஒரு ஈடுபாட்டுடன் செய்தாள். காய்ந்த இலையும் கம்புமாக இருந்த முற்றம் தூய்மையாக மாறி விட்டது. என்னிடன் சில பழைய உடைகளும் வாங்கியவள் பக்கத்து வீட்டில் துணி துவைக்க தேவை என்றால் சொல்லி வைய்யுங்கள் என்று சொல்லி சென்றாள். நான் சிறிய பணம் கொடுத்த போது எனக்கு வேண்டாம் சைக்கிள் கிடைத்து விட்டதே என இன்முகத்துடன் மறுத்தாள். வற்புறுத்தி கையில் தினித்த போது வாங்கி கொண்டாள்.

ஒரு சில நாட்கள் பின் சைக்களுடன் தூரத்தில் வருவதை கண்டேன். ஷக்தி நலமா என்றதும் அக்கா நீங்கள் என் பெயரை மறக்கவில்லையா. சைக்கிளை பழுது பார்த்து விட்டேன். உங்களிடம் காட்டி விடலாம் என்றே வந்தேன். வாரக் கடைசி நாட்களில் வந்து துணி அலம்பி தருகின்றேன் என்று சொல்லி சென்றவள் சில வாரங்களில்  சொன்னது போல் வந்து வேலையும் செய்து தந்து சென்றாள்.

பின்பு பல மாதங்களாக காணாது இருந்ததால் எங்கள் வீட்டு முற்றவும் குப்பையாக காட்சியளிக்க; பூக்கார அக்காவிடம் ஷக்தியை தெரியுமோ என்ற போது உங்களுக்கு தெரியாதா அவளை போலிஸ் பிடித்து சென்று விட்டது. லோக்கல் தொலைகாட்சியில் பார்க்கவில்லையா அவள் 3 நபர்களுடன் பிடிக்கப்பட்டாள் என்றார். எனக்கு ஆச்சரியம் எப்படி இப்பிள்ளை இந்த சூழலில் விழுந்தது. அந்த குடியிருப்பில்  இந்த தொழில் செய்பவர்கள் வசிப்பதையும் சில பெண்கள் கந்து வட்டிக்காரர்களிடம் மாட்டி கொண்டு தவிப்பதையும் நேரிலே கண்டுள்ளேன். ஆனால் ஷக்தி போன்ற வேலையில் ஈடுபாடுள்ள பெண் எப்படி மாட்டினாள் என்று ஆயிரம் கேள்விகள்.  அக்கா, நேரம் பிந்தினால் பாட்டி தேடுவாள்  கிளவி கண்டமேனிக்கு திட்டுவா என்று சொல்லி சிரித்து கொண்டிருந்தாளே என்று என் மனம் பதறியது.

அவளை மறந்து விட்ட நிலையில் பல மாதங்கள் பின்  ஷக்தி போன்றே ஒரு சின்ன பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள். உற்று நோக்கிய போது ஓ ஷக்தி தான் தலை கிராப் வெட்டி நவீன உடையுடன் சிரித்து கொண்டே வந்து கொண்டிருந்தாள். என்னம்மா நிறைய நாட்களாக காணவில்லையே என்ற போது  அக்கா பின் தலையில் அறுவை சிகித்சை, திருவனந்தபுரத்தில் சிகித்சையில் இருந்தேன் என்றாள். இப்போது கண் புருவம்  வில்லாக வளைத்து வெட்டப்பட்டிருந்தது.  பழைய ஷக்தி அல்லாது புது ஷக்தியாக தெரிந்தாள். ஆனால் கண்ணில் ஒரு சோகம் நிழலாடியது கண்டேன். உன்னை பற்றி கேள்வி பட்டேன் என்று அவளிடம் கேட்க மனம் வரவில்லை. இருந்தும் சிறிய மனக்குழப்பம் பயம்.  ஆனால் அவளோ  வேலை இருந்தால் செய்து தருகின்றேன் என்றாள். இந்த முறை துணி துவைத்து தந்தவள் பழையது போல் ஈடுபாடாக செய்யவில்லை அவ்வளவாக பேசவும் இல்லை.   வாரம் கடைசி நாள் வந்து பணம் வாங்கி கொள்கின்றேன் என்று சொல்லி சென்றவள் பின்பு வரவே இல்லை.

ஒரு நாள் முச்சந்தியில் வைத்து பார்த்தேன். ஒரு நாள்  குடியிருப்பில் கொட்டடி சத்தம் கேட்டதும் என்ன என விசாரித்த போது ஷக்தி என்ற ஒரு சிறு பெண்ணை அவள் அப்பன் அடித்து கொன்றுவிட்டான் என்றார் பூக்காரி !




1 comment:

  1. மிகவும் வலிகூடிய பதிவாக இருக்கிறது இப்படி இன்னும் எத்த்னை ஷக்திகள் இருக்கிறதோ இந்த பூமியில்...:(

    ReplyDelete