8 Jan 2013

உங்கள் பாதுகாப்பு யாரிடம்?


கேட்க வித்தியாசமாக இருந்தாலும் உண்மை நிலவரம் இதுவே.  பிறக்கும் குழந்தையில் இருந்து மரணப் படுக்கையில் இருக்கும் மனிதன் வரை அடுத்தவர்கள் தயவை, மனிதத்தை எதிர்பார்க்கும் சூழலில் தான் வாழ்கின்றோம். இந்த சூழலே நம்மை சமூக ஜீவியாகவும் மாற்றுகின்றது. மனித வாழ்வில் இந்த சுற்றியுள்ள நல்ல மனிதர்கள் அதாவது நாம் வாழும் சுமூகமான சமூகம் இன்றிமையாதாகின்றது. ஆனால் சமூகம் தனி நபர் மகிழ்ச்சியின் சிறிதேனும் பங்குபெறுகின்றதா என்றால் பல காரணங்களால் மவுனித்து அல்லது கண்டு கொள்ளாது வெறும் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு நிற்கின்றது.



 ஒரு குழந்தை மகிழ்ச்சியாக வளர அதன் பொறுப்பு பெற்றோரிடம் உள்ளது போலவே பல வாகன விபத்துகளில் ஒரு மனிதனின் பாதுகாப்பு அந்த பாதையில் பயணிக்கும் சகபயணிகள்  கைகளில் தான் உண்டு. இரண்டு வருடம் முன்பு நெல்லை பல்கலைகழகம் முன்பு நடந்த ஒரு விபத்து தான் நினைவில் வருகின்றது.  காலை நேரம் 10 மணி !  இளம் வயதிலே நோய் வாய்ப்பட்டு இறந்த தகப்பனுடைய மகள்.  தாயும் நோயால் இறந்து சில நாட்களே ஆகி விட்ட நிலையில் தேற்வு எழுத வருகின்றார். ரோட்டை கடக்கும் நேரம் பின்னால் வந்த சரக்கு ஆட்டோ இடித்து தள்ளி விட்டு நகர்ந்து விட்டது. சில விநாடிகளில் அவ்வழியாக பல்கலைகழக பேருந்துகள், பல மகிழுந்துகள் கடந்து செல்கின்றது. ஆனால் 108 அழைப்பால் ஆம்புலஸ் வரும் வரை மாணவி ரோட்டில் கிடந்தே உயிரை விடுகின்றார்.  அதன் பின் மரணாந்தர கிரியகளுக்கு பங்கு பெறுகின்றனர்; சிலர் போராடலாம் என கூக்குரலிடுகின்றனர் சிலரோ பரிதாபப்படுகின்றனர். ஆனால் மேல்நிலை பள்ளியில் படிக்கும் அவள் சகோதன் மட்டும் தான் அந்த கொடிய தவிப்பை, இழப்பை அனுபவித்திருப்பான்.

டெல்லி மாணவி வழக்கில் அவருடைய நண்பர் மொழியில் இருந்து புரிந்து கொள்வதும் அந்த கொடூரமான மனநிலை கொண்ட சமூகத்தை தான். சொல்லப்போனால் அந்த 6 கொடிய  நபர்களை விட இரக்கமற்றது இந்த சமூகம் தான்.  அந்த மாணவி ஆடையற்றும் இரத்த போக்குடனும் பல மணி நேரம் தெருவில் வீழ்ந்து கிடந்த போதும் இந்த சமூகம் வேடிக்கை பார்த்து கொண்டு தன் போக்கில் கருத்துக்கள் விதறி கொண்டும் நகர்ந்தது,  ஒரு உடை கொடுக்க முன் வரவில்லை ஏன் பாதிக்கப்பட்ட நபரே இன்னும் கடுமையாக பாதிக்கப்பட்ட இன்னொரு நபரை வானகத்தில் ஏற்றுகின்றார். இந்த இடங்களில் தான் சமூகத்தின் மனசாட்சி செத்து விட்டதே நாம் காண்கின்றோம்.  அதே சமூகம் தனி நபர்களை விரட்டுவதில் தண்டிப்பதில் நியாயத் தீர்ப்பிடுவதில் துடிக்கின்றது.

நம் சமூக வாழ்கை எல்லா நிலையிலும் மற்றவர்கள் தயவில் தான் நிர்ணயிக்கப்படுகின்றது என்பதை ஒவ்வொரு நிகழ்விலும் காண்கின்றோம்..  ஒரு வயதான முதியவர் நிம்மதியாக உயிர் வாழ அவ்வீடிலுள்ள சிறுவயதினர் கரிசனையாக நடந்து கொள்ள  வேண்டும். அதே போன்று அந்த வீட்டிற்கு வாழ வரும் பெண் நிம்மதியாக வாழ கணவர் மட்டுமல்ல அந்த வீட்டு முதியவர்களும் அனுமதிக்க வேண்டும். ஏன் பிறந்த வீட்டில் கூட ஒரு பெண் ஆகட்டும் ஆண் ஆகட்டும் சுதந்திரமாக நிம்மதியாக வாழ அந்த வீட்டில் தன்னுடன் வசிக்கம் மற்ற நபர்களின் அனுமதியும் தேவையாக வருகின்றது. என் உறவுக்கார பெண் வசதியான வீடு,  நல்ல குடும்பம் என திருமணம் செய்து கொடுத்தனர். ஆனால் அவ்வீட்டு முதியவர்கள் எங்கள் காலம் பின்பு தான் வீட்டில் உரிமை என்றதும் வாடகை வீடு,  நிரந்த வேலையின்மை என வறுமை கோட்டின் கீழ் தான் வாழ்ந்து வந்தனர்.

அதே போன்று தான் ஒரு மாணவன் நல்ல கல்வி பெற வேண்டுமா அந்த கல்வி நிறுவனம் ஆசிரியர்களின் தயவு பெற்றோரின் அனுமதி தேவையாக உள்ளது. எதிர் வீட்டு பெண்மணி கூறிய நிகழ்வு வருத்தம் அடையச் செய்தது. மகனை படிப்பிக்க ஆசைப்பட்டாராம்.  ஆனால்என்னால் பள்ளியில் அடிவாங்க இயலாது” என மகன் தன் படிப்பை தொடரவில்லையாம்.  இன்றைய அரசியலை பாருங்கள் அரசியல் வாதிகள் புரியும் ஊழல் கடைநிலை மனிதனையும் பாதிக்கின்றது. அதிகாரிகள் அரசியல்வாதிகள் சதியால் பல மக்கள் வறியநிலையிலும் அகதிகளாகவும் மாற்றப்படுகின்றனர். மேற்குலகு நாடுகளின் இரக்கமின்மையால் கிழக்கு தேச நாட்டு மக்கள் கொடிய வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர்.



வேலையிடங்களிலும் இதே சம்பவங்கள் தான் அனுபவங்களில் காண்கின்றோம். என் தோழரிடம் கேட்டேன். எப்படி வேலை போகின்றது. அவர் சொல்கின்றார் வேலை எளிதே; அங்குள்ள அரசியலை சமாளிப்பது தான் சிரமம். கொத்தனார் நூல் பிடிப்பது போல் நிற்க வேண்டும். அல்லை என்றால் நம் வேலையை பறித்தெடுக்க ஓநாய் கூட்டம் போல் ஒரு கூட்டம் பல்லிளித்து கொண்டு சுற்றும் நிற்கும். இதுவே மிகவும் மன அழுத்தம் தருவதாகவும் குறிப்பிட்டார்.
 
இங்கு தான் மனித நேயம், மனிதம், அறம் உயிர் பெற வேண்டியுள்ளது. சிலருக்கு சிலரை பிடிப்பது இல்லை என்றால் அழிக்க வேண்டும் ஆள் வைத்தாவது கொல்ல வேண்டும் என்ற மன நிலை மனிதமல்ல. சிலருக்கு தாழ்வு மனபான்மை என்ற நோய் போலவே பலருக்கு அதற்கு நேர் எதிரான மேட்டிமை மனநிலையால் பலர் அல்லல்ப்படுவது  உண்டு.  தாழ்வு மனப்பாட்மை தன்னை தானாக கொல்வது போல மேட்டிமை மனப்பான்மை கொண்டவர்கள் தங்களை சுற்றியுள்ளவர்களை அழிக்கின்றனர்.  இவர்களை கண்டு பிடிப்பது எளிதே.  தன் கருத்தே சரி, தான் நம்பும் கடவுளே மிகவும் சிறந்தவர், அல்லது நான் நம்பாததால் கடவுள் உண்டு என யாரும் நம்பக்கூடாது, தன் கொள்கையை உயர்வானது, தன் குடும்பத்தான் சிறந்தது., தன் குழந்தைகளே சிறந்தவர்கள், இப்படி தான் தான் என தான் சார்ந்த விடயங்களில் வெறிபிடித்தவர்களாக இருப்பார்கள். இவர்களை இனம் கண்டு விலகி தப்பித்து வாழ்வது தான் மிகப்பெரிய சவால். எப்படியோ பலருடைய நல் வாழ்வுக்கு காரணமாகாவிடிலும்  துன்பத்திற்கு சக மனிதனை ஆளாகாதீர்கள்

3 comments:

  1. Prabu Michael · Network Engineer at Cisco SystemsJanuary 09, 2013 8:38 am


    // அந்த 6 கொடிய நபர்களை விட இரக்கமற்றது இந்த சமூகம் தான். //

    உண்மை.... :-(

    சமூகப் பொறுப்புணர்வு நம்மை எப்போதும் சூழ்ந்தேதான் இருக்கின்றது... இது அதிகம் படிப்பறிவில்லாத பொருளாதார முன்னேற்றமோ அல்லது தொழில்நுட்பப் பேரறிவோ இல்லாத நம் முன்னோர்களுக்கு அதிகம் இருந்தது நமது தலைமுறையில் தேயத்தொடங்கி இன்னும் மனிதாபிமானம் தேய்பிறையிலேயேத்தான் இருக்கின்றது..... மிக யதார்த்தமான நடையில் அழுத்தமான பதிவு சகோ.... வாழ்த்துக்களும் நன்றிகளும்!
    Reply · Like · 8 hours ago

    J P Josephine Baba · Top Commenter · Manonmaniam Sundaranar University, India
    தங்கள் பின்னூட்டம் என் பதிவுக்கு வலு சேர்க்கின்றது நன்றி மகிழ்ச்சிகள்

    ReplyDelete
  2. மனிதாபிமானம் என்றால் என்ன என்று கேட்கும் நிலைமை தான் இப்போது. ரோடில் டில்லி பெண்ணின் நிலைமை பற்றி அறிந்த போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

    ReplyDelete