24 Nov 2015

மழை மழை....

மழையும் எங்களையும் பிரித்து பார்க்கவே முடியாது. மேற்கு தொடற்சி மலையின் அடிவாரம் தான் எங்கள் குடியிருப்புகள் என்பதால் மழை தான் எங்கள் ஒரே காலநிலை என்று இருந்தது. நாங்கள் ரமணன் வானிலை அறிக்கையாலரர்களின் மொழி எல்லாம் நம்புவதில்லை. வீட்டில் இருந்து கிழம்பும் போதே " கொடைய எடுத்துக்கோடி மழை வரும் மேகமூட்டமா இருக்குது" என்று கட்டளைக்கு படிந்து குடையும் கையுமாகவே நடப்போம். பள்ளிக்கு செல்லும் போது எங்கள் துணிப்பை,  சாப்பாட்டுப் பை, குடை என மூன்றும் எங்களிடம் ஒன்று சேர்ந்தே இருக்கும். 


ஆறு மாதம் மழை, மூன்று மாதம் வெயில் மூன்று மாதம் பனி என்பது தான் காலநிலை. மூன்று மாத வெயில் தான் எங்களை மிகவும் துன்பப்படுத்தும் வாழ்க்கை நிலை. அப்போதும் குடையை விட்டு வைப்பதில்லை. கர்ணனுக்கு குண்டலம் என்பது போல் தான் எங்கள் பகுதி மக்களுக்கு குடை. இங்கு பீடி சுற்றும் தொழில் போன்றே பெண்கள் சுய உதவி குழுவுக்கு குடை செய்வது தான் ஓர் தொழில். குடை தைப்பவரும் தெருவுக்கு தெருவு இருப்பார். குடை கூட காலன் குடை, பாரின் குடை, நீளக்குடை என்று பல வகையில் இருந்தது. காலன் குடை என்பது கைபிடி வைத்து அதன் தலைப்பக்கம் மாட்டுக்கு கொம்பு என்பது போல் இருக்கும். பொதுவாக வயதான தாத்தாக்கள் பயண்படுத்துவது. மழைக்கு குடை என்றால் மழை இல்லாத போது நடை கம்பாகவும் பயண்படுத்தி கொள்வார்கள். சென்னையில்  சமீபத்திய கலாச்சாரமாக அழகிய இளம் கல்லூரி மாணவிகளும் இக்கொடையை பயண்படுத்துவதை கண்டேன். இந்த குடையை பிடித்து கொண்டு குதிரை போல உயரமுள்ள மாணவிகள் நடந்து போவதே ஓர் அழகு. .  அடுத்தது தான் பாரின் குடை! இது பல வண்ணங்களில் இரண்டாகவும் மூன்றாகவும் மடக்க தகுந்து. இந்தக் குடை காற்றுக்கு பலக்காது.  குடையும் சூடி அன்ன நடை நடந்து போகும்  பெண்களுக்கான குடை இது. 

 

பெரிய குடைகள் வகை தான் நாங்கள் பள்ளிக்கு கொண்டு செல்வது. 
சில நேரம் மாணவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்ளவும் பெரியவர்களுக்கு  நாயை, விரட்ட  ஆயுதமாக பயண்படுத்துவதும் இந்த குடையைதான். பல நேரங்களில் பூவாலன்(பெண்கள் பின்னால் நடக்கும் ஆண்களுக்கு பெயர்)பொடியன்களில் இருந்து பெண் பிள்ளைகளை காப்பாற்றுவதும் இந்த குடை தான். 


பள்ளிக்கு செல்லும் போதே மாற்று உடையும் எடுத்து கொள்வோம். எப்படியும் பள்ளி செல்லும் போது தொப்பு தொப்பாக நினைந்து விடுவோம். சில பிள்ளைகள் இதனால் தான் இந்த நவ நாகரிக குடையை சாராது பிளாஸ்டிக் கொங்காணிகளை பயண்படுத்தி கொள்வர்.  எங்கள் பள்ளிகள் ஒவ்வொரு மலை மேல் தான் இருக்கும். போகும் போது கஷ்டபட்டு ஏறி சென்றாலும் இறங்கும் போது கீழ் நோக்கி ஒரே ஓட்டம் தான் . அப்படி தான் எங்கள் தோழிகள் செல்லவேண்டிய பேருந்து தூரத்தில் ரோட்டில் வருவதை கண்டதுமே நாங்கள் மலை மேல் இருந்து சத்தமிட்டு ஓலமிட்டு கும்பலாக ஓடி வருவோம் . பேருந்துகாரன் பயந்து  என்னடா ஆச்சு என்று விசாரிக்கும் முன் மீன் மூட்டை போன்று அடைத்து வைத்துள்ள பேருந்தில் எங்கள் தோழிகளையும் ஏற்றி விடுவோம். இந்த பேருந்துக்காரனுகள் பள்ளி பிள்ளைகள் தொல்லை இருக்கக்கூடாது என்றே பள்ளி விடும் நேரம் முன் பாதையை கடந்து விடுவான். சில நேரங்களில் எங்கள் நேதாக்களுடன்(தலைவர்கள்)  சென்று வழி மறிக்கும் படலவும் உண்டு. 

அன்றைய  30 வருடம் முன் வண்டிப்பெரியாரில் மூன்று அரசு பள்ளி தான் இருந்தது.  அந்த பள்யை நம்பியை சுற்றுப்புறம் உள்ள எஸ்டேட் மாணவர்கள் இருந்தனர். 10 மணிக்கு ஆரம்பிக்கும் பள்ளிக்கு வர காலை 6 மணிக்கே நடக்க ஆரம்பிக்க வேண்டும். நடந்து பள்ளிக்கு வந்து திரும்பி வீடு போய் சேர  கிராம்பி, மவுண்டு போன்ற எஸ்டேட் மாணவர்களுக்கு  இரவு 7-8 ஆகி விடும். சில வசதியான மாணவர்கள் ஜீப்பில் வருவார்கள். ஜீப்பில் கம்பியில் தொங்கி மேல்ப்புறம் இருந்து என எங்கு எங்கெல்லாம் இடம் இருக்குமோ கடிமாக பயணப்பட்டு வருவார்கள்.  பின்பு சில காலம் கழிந்து எஸ் என் வி நாராயணன் முதல் பேருந்தை இறக்கினார். அத்துடன் பசுமலை போன்ற பகுதி மாணவர்களுக்கு வேறு ஒரு பேருந்து வந்து சேர்ந்தது.  பேருந்தை பிடிப்பது என்பது ஒலிபிக் ஓட்டத்தில் பங்கு பெறுவது போல் தான் இருந்தது. இவர்கள் தங்கள் எஸ்டேறில் இருந்து வண்டிப்பெரியார் டவுணை எட்ட; பின்பு நாங்கள் எல்லோரும் சேர்ந்து எங்கள் பள்ளிகளை பிடிக்க மழையில் நடைந்தும் நடந்தும் ஓடியும் சென்று சேர்வோம்.  25-30 வருடம் ஆன பின்பும் தற்கால என் மாணவர்கள் கூட பேருந்து வசதியில் இதே வசதியின்மையை தான் எதிர் கொள்கின்றனர் என்பது பெரும் துயரே. அதை பற்றி ஓர் பதிவை தேவை வரும். திருநெல்வேலி கார்ப்பரேஷன் பகுதிக்குள்ளே சிறந்த பேருந்து வசதி இல்லை முனஞ்சிப்பட்டி தேவர்குளம் போன்ற பகுதிக்கும் செல்லும் மாணவர்கள் இதே சிக்கலிலே அல்லாடுகின்றனர் என்பதை பேருந்து நிலையத்தில் நாம் சிரிது நேரம் நின்றால் புலன்ப்படும்.
மழை மழை என்று எப்போதும் சினுங்கியும், சிரித்து, கோரமாகவும்   பெய்து கொண்டே இருக்கும்.  இதன் மத்தியில் தான் எங்கள் வாழ்க்கையும் பெய்து கொண்டிருந்தது. தொடர்ந்து ஓர் மூன்று மாதம் பேய் மழை பெய்ய வழித்தடங்கள் அடைக்க ஆரம்பிக்கும். முதல் அபாயசங்கிலி "கக்கி கவலை" என்ற இடத்தில் ஆரம்பிக்கும். இது பெரியாருக்கும் குமளிக்கும் இடைப்பட்ட . அங்கு  ஓர் பெரிய தண்ணீர் வழித்தடம் இருந்தது. மழை நேரம் தண்ணீர் பெரியார் ஆற்றை சென்று சேர என நோக்கத்துடன் இருந்த அந்த ஓடைக்கு அருகில் கூரை கட்டியவர்கள் பின்பு ஓடையை அடைத்து தன் மேல் சிமின்று ஸ்லாப் போட்டும், அடுக்கு மாடி கட்டிடங்களை கெட்டி குடியிருக்க ஆரம்பித்து விட்டனர். கக்கி கவலையில் தண்ணீர் ஏறி விட்டது என்றால் அங்குள்ள வீடுகள் அதன் அருகிலுள்ள அரசு ஆஸ்பத்திரியும் தண்ணீருக்குள் மூழ்கி விடும். இது போன்ற ஒரு வெள்ளப்பெருக்கு நேரம் தான் மாமாவுக்கு கடைக்குட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்திருந்தாள். பிள்ளை வெள்ளைக்காரி போன்ற வெள்ளை நிறம் என்றதும் கறுத்த பொக்கு வாய் தாத்தா கூட பெருமை பேசி கொண்டிருந்தார். நாங்கள் பிள்ளையை பார்க்க தேயிலைச்செடிகளை பிடித்து காடு வழி சென்று வந்தது நியாபகம் உள்ளது. 

மக்கள் தண்ணீருக்குள் கிடந்தாலும் தாங்கள் புறம்போக்காக கையடக்கிய இடத்தை பற்றியோ, தங்கள் ஆக்கம் கெட்ட நிலம் கையடக்கல் செயலை பற்றியோ வருந்தாது மழையை திட்டி கொண்டே இருப்பார்கள்.  நாச காலமான மழை எப்போது தான் வெறிக்குமோ..? 

பெரியார் ஆற்றின் அழகை வர்ணிக்கவே இயலாது. அவ்வளவு அழகான ஆறு. அதன் நீளம் அகலம் அதன் ஓடும் அழகு இதை படம் பிடிக்கவே வெள்ளைக்காரர்கள் வந்து குமியுவார்கள் எங்கள் ஊருக்கு. அந்த பாலம் கட்டினதும் வெள்ளாக்காரன் தான். வண்டிகளை ஓடவைக்க கெட்டிய பாலம் என்பதால் வண்டிப்பெரியார் என்றே எங்கள் ஊருக்கு பெயர் வந்தது. வெயிலில் வரண்டு ஒடுங்கிய பாலம், மழை நேரம் கரை புரண்டு ஓடும். கரையில் மேல்ப்புறங்களில்  வீடுகட்டி குடியிருப்பவர்கள் ஒன்று இரண்டு என 30-40 படிகளை கட்டி கட்டி ஆற்றை ஒட்டியும் வீடு கட்டி விடுவார்கள். இந்த வீடுகளை வாடகைக்கும் கொடுப்பார்கள் சில நேரம் இவர்களும் தங்கி இருப்பார்கள். இயற்கையிடம் மோதுமின்றோம் என மறந்து தங்கள் பெரும் ஆசையால் தெரியாததால் கரைபுரண்டு ஓடும் தண்ணீரிடம் போரிட இயலாது சில நேரம் உடை , பொருள் என சகலவும்  தண்ணீரில் இழந்து அழுது புலம்புவார்கள். சில பொழுது எதிர்பாராத நேரம் இரவு நேரம் வரும் தண்ணீரால் குடும்பமே தண்ணீரில் அடித்து செல்லும் நிகழ்வும் நடந்து உள்ளது. 

இவர்களை மீட்டு எங்கள் பள்ளியில் தங்க வைப்பதால் 'எப்போ பள்ளி திறக்கும்' என்று ஏக்கம் கொள்ளும் மட்டும் பள்ளி நெடுநாள் விடுப்பு விட்டு விடுவார்கள். இது போன்ற பேராபத்து நேரங்களிலும் வலுவான சிலர், ஆற்றுக்கு மத்தியில் கயிர்கட்டி அல்லது, மரம் போன்றவையில் தட்டு தங்கி நிற்கும் கட்டில் மேஜை போன்ற பொருட்களும் எடுத்து செல்வதும் உண்டு. இது போன்று ஆற்றம்கரையில்  கட்டி வைத்துள்ள கான்வென்றும் நீரில் மூழ்கி விட்டது. காப்பாற்ற சென்றவர்கள் மிதித்த இடத்தில் பாம்புகள் நெளிந்து ஓடியதை இப்போதும் பயத்துடன் நினைவு கூர்வார்கள். இது போன்ற மழையில் ஆற்றம் கரையில் கட்டி வைத்துள்ள ஆசிரியர்கள் வீடுகளை மீட்கும் பொறுப்பான பணியில் எங்கள் மாணவர்கள் பங்கு சேர்வார்கள்.  இந்த நேரம் தான் எங்கள் ஓடைகைளில் ஆற்று  தண்ணீரும் கலந்து மீன்கள் நகரம் வழி பாயுவதும் அதை பிடிக்க துண்டும் தோர்த்துமாக எங்கள் வீட்டு பொடியர்கள் பாயுவதும் மீனைப்பிடித்து வந்து எனக்கு இவ்வளவு  உனக்கு இவ்வளவும் என பங்கிட்டு கொள்ளும்  அந்தக்கால மகிழ்ச்சியான நினைவுகளும் கூட. ஆற்றில் ஓடும் வெள்ளத்தில் காட்டு பூக்கள், பாயல் என போகும் அழகு தான் இப்போதும் நினைவில் உள்ளது.

இந்த மழைத்துயரில் எங்களை அச்சம் கொள்ள வைக்கும் டாம் புரளிகளும் கரை புரண்டு ஓடும். ஒவ்வொவு நாள் இரவில் தூங்க போகும் போதும் காலை நம் தலை மேல் தண்னீர் ஓடுமோ,  அப்படி டாம் உடைந்தால் நாம் எதிர் காணும் பழையகாடு பங்களா மொட்டையில் தப்பித்து விடலாமோ என அந்த சின்ன நாள் மனதுகளும் அங்கலாய்த்து கொள்ளும். இப்படியாக மழையுடன் சேர்ந்தும் இனிமையான  கேளிக்கையான விளையாட்டு நினைவுகளுடன் பயவும் வருத்தங்களும் சேர்ந்தே பயணிக்கின்றது. 

3 comments:

  1. மழை நினைவுகளை மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கீங்க. உங்க ஊரும் படங்களும் ரொம்ப ரொம்ப அழகு :)

    ReplyDelete
  2. நன்றி சுந்தரா

    ReplyDelete