3 Apr 2016

நம் மகன்கள் வேதனை!

பாபா அத்தான் சில எச்சில் கணக்குகளை மனதில் வைப்பதே தவறு. இருப்பினும் நம்மை பெரிதும் சங்கடத்திற்குள்ளாக்கியது உங்களை பண்ணையார் என்று கேலி செய்ய வைத்தது என்பதால் இதை பதியுகின்றேன். மேலும் நீங்கள் இறந்த போது உங்களை பற்றி பேச்சு எழுந்த போது உங்கள் வீட்டிற்கு என நீங்கள் ஒன்றும் செய்யவில்லை. எப்போதாவது 500 ரூபாய் தந்துள்ளான் என்றார் உங்கள் அம்மா!?


  உங்கள் அப்பா மருத்துவமனையில் இறந்த பின்பு தான் உங்களுக்கு செய்தி அனுப்பினார் உங்கள் அம்மா! நாம் நாசரேத் வந்தடையும் முன்னே உங்கள் அப்பா  உடலை வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விட்டார் உங்கள் தாயார். அன்றைய தினம்  ஜூன் 5  2015. அன்றே உங்கள் மரண தினவும் குறிக்கப்பட்டது என நினைக்கின்றேன். உங்கள் தம்பிக்கு செய்தி அனுப்பியும் அவன் வருகிறான், வரலாம்,வரவில்லை போன்ற செய்திகள் தான் வந்து கொண்டிருந்தன.  உங்கள் அப்பா இறந்து விட்டார் என்று அறிந்ததும் நீங்கள் செய்த முதல் வேலை ”ஜோஸ் என்னுடன் வருவாயா” என்று என்னிடம் கேட்டு விட்டு பணம் புரட்டி கொண்டிருந்தீர்கள். பல ஆயிரங்கள் கைகளில் சேர்ந்த உடன் நாசரேத் புறப்பட்டோம். உங்க அம்மா சோகத்தில் கதைத்து கொண்டு நின்றார். நீங்க உங்கள் பையில் இருந்து பணத்தையும் காசையும் அள்ளி எறிந்து கொண்டு இருந்தீர்கள். எனக்கோ ஆச்சரியம் அத்தானிடன் எப்படி இவ்வளவு பணம் என்று. இருந்தும் நான் காதில் கூறினேன் பணத்தை கவனமாக கையாளுங்கள்.உங்கள் அம்மா தன் வங்கி கணக்கை திறக்கவே இல்லை. சோகமாக இருப்பது போல் இருந்து கொண்டார்.  நம் இருவரிடமும் பெரிதாக பேசிக்கொள்ளவில்லை. நீங்கள் கடமையில் கண்ணாக இருந்தீர்கள். நான் உங்களுக்கு உதவியாக நின்று கொண்டிருந்தேன். உங்கள் சகோதரன் காலையில் வந்து சேர்ந்ததும் உங்கள் தாயார் மகன்- மருமகளை கட்டி பிடித்து ‘ஆமோஸ் தாத்தா “ போயிட்டாருடா என்று அழுது கொண்டார். ஏழு மணிக்கு அடக்கம். பெட்டியை வீட்டை விட்டு எடுக்கும் முன் சொந்த பந்தங்கள் கேட்கும் படி உங்க அம்மா உங்க அப்பாவின் உதவியாளரை பார்த்து ”சாத்திராக் சார் போயிட்டாருடா, சார் கேட்டது மாதிரியை எல்லாம் செய்து விட்டாய்  நன்றிப்பா என உருகி கொண்டு இருந்தார். எனக்கோ நேற்றைய காலை முதல் இன்று காலை இந்நேரம் வரை நீங்கள் தான் கை திறந்து பணம் கொடுத்து கொண்டிருந்தீர்கள் என உள் நெஞ்சில் குத்தியது.

மூன்றாம் நாள் ஜெபக்கூட்டம். அப்பா விரும்பி சாப்பிடும் ஆட்டு இறச்சி தான் வேண்டும் என்றான் உங்கள் தம்பி. நீங்களும் சரி என்றீர்கள். ஆட்டிறச்சி ஏற்பாடானது. பணத்தை உங்களிடம் இருந்து வாங்கி அடுத்த நாள் பணம் வாங்க வந்த கடைக்காரனிடம் பட்டுவாட மட்டும் செய்து கொண்டான். மாலை நான்  உங்க அம்மாவிடம் இனி மாமா இல்லை. இருக்கும் வரை நாங்கள் ஒன்றும் கேட்டதில்லை. உங்களை நம்பி பணம் உண்டா, எங்கள் வீட்டிற்கு வருகிறீர்களா என்றதும் நான் என் வீட்டில் தான் இருப்பேன். செலவுக்கு தரவேண்டும் என்றார். உங்கள் சகோதரனோ ஏன் இதை எல்லாம் கேட்கின்றீர்கள் என்று என்னிடம் கேட்டு கொண்டான். அடுத்து செலவு கணக்கை உங்கள் அம்மாவிடம் காண்பித்த போது எழுதி கொடுத்த லிஸ்டை அப்படியே உங்களிடமே கொடுத்தார். உங்க தம்பி வீடு தனக்கு வேண்டும் என்றும் தன் பிறந்தது இறந்த  குழந்தையை புதைத்துள்ளதால்  தனக்கு தான் வீடு என்றான். உங்க அப்பா வாங்கி போட்டிருக்கும் நாலு பிளாட்டு தனக்கு கிடைக்கலாம் என்ற நோக்கில் உங்க அம்மாவிடம் கேட்ட போது அந்த இடம் வாங்கி போட்டதை அப்பா கூறினர்களோ? எனக்கு மருத்துவ செலவுக்கு வேண்டும் என்றார். நீங்க அமைதியாக என் முகத்தை பார்த்தீர்கள். திரும்பி காரில் வரும் போது நான் கூறினேன் விரும்பி தராத சொத்து நிலைக்காது அத்தான் நீங்க அதற்காக சச்சரவுக்கு போக வேண்டாம். நீங்கள் இப்போது செலவழித்த பணத்தின் ஒரு பங்கை மட்டும் தரக்கூறுங்கள் என்றேன். உங்க தம்பி இங்கு இருக்கும் வரை சென்னையில் சென்றதும் அனுப்பி தருகிறேன் என்றவன் சென்னையில் இருந்து கதைக்கும் போது என்னிடம் பணம் இல்லை நான் கொடுக்கவும் தேவை இல்லை என ஒதுங்கி கொண்டான்.





நான் நீங்கள் ஏமாற்றபட்டதாக குற்றம் சாட்டினேன் . நீங்களோ பெற்ற அப்பனுக்கு செய்வது என் கடமை. அவன் செய்கிறானா என்று நான் பார்க்க தேவையில்லை என்றீர்கள்.  மேலும் என் அப்பா என்னை ஒதுக்கி தள்ளினார் இப்போது பார்த்தாயா நான் தான் அடக்கம் செய்துள்ளேன் என்று தற்பெருமையாக சொல்லி கொண்டீர்கள்



ஜாதி சாற்றிதழ் உங்க அம்மா பென்ஷன், வாரிசு சாற்றிதழ் என எல்லாம் நடையாய் நடந்து பெற்று கொடுத்தீர்கள். உங்க அம்மா இதற்கு பதிலாக அவர்கள் ஜோடியாக நிற்கும் படத்தை கொடுத்துள்ளனர். இந்த படத்தை பர்சில் வைத்து கொண்டீர்கள்., உங்க அம்மாவிற்கு உங்க அப்பா இறந்து 40 நாட்களுக்குள் இதய நோய் வந்து விட்டது. நீங்க கார் பிடித்து உங்க மடியில் கிடத்தி வந்து சி எஸ் ஐ மிஷன் மருத்துவ மனையில் சேர்த்தீர்கள். ராவும் பகலும் நீங்கள் இருந்து கவனித்து வந்தீர்கள். நான் பகல் பொழுதில் உணவுடன் வந்து உடன் இருந்தேன். அவரை இரவில் கவனிக்க என ஒரு பெண்  மணிக்கு தினம் 250 கொடுத்து அமர்த்தினீர்கள். 
அந்த அம்மா உங்கள் அம்மாவுடன் தங்கி இருக்கும் போது நிகழ்ந்த சம்பவங்களை உங்களிடன் கூறினது. போகும் போக்கில் சார்”உங்க தாயாரை பெற்ற கடமைக்கு பார்த்து கொள்ளுங்கள்”வேலைக்கு தான் நீங்க இரண்டு பேரும் என்றார். அவர் மணிக்கணக்காக பேசுவது அந்த மகன்-மருமகளுடன் தான் என்று கூறி சென்றார்.

என்னிடமும் கூறியிருந்தார் ”சாரை அந்த கிழவியிடம் அனுப்பாதீர்கள் சூனியக்காரக்கிழவி”. அந்த பெண்மணி ஏன் அப்படி கூறினார் என நான் சிந்திக்க போகவில்லை. எனக்கு பதிலாக இரவில் என் மாமியாரை  கவனித்தார் என்பதால் தான் அந்த பெண்ணின் மகன் திருமணத்திற்கு இரண்டாயிரம் கேட்ட போது கொடுத்தேன். மரண சாற்றிதழ், சாகும் முன் உங்க அப்பா கோர்ட்டில் வைத்திருந்த வீட்டு பத்திரம் மீட்க. வாரிசு சாற்றிதழ் வாங்கி கொடுக்க என அலைந்து உங்கள் அலுவலகம் வேலையாட்கள் கவனிக்கப்படியான சூழல் உருவானது. 

இப்படியான சூழலில் தான் உங்க தம்பிக்கு வேலை கிடைக்க முன் பணம் கட்ட உங்களிடம் பணம் கேட்க; கையிலிருந்த இரு லட்சத்திற்கு மேல் வங்கியில் இருந்தும் கடனாக எடுத்து கொடுத்துள்ளீர்கள். இதனிடையில் கத்தார் என்ற ஆசையை உங்களில் புகுத்திய உங்க  தம்பி  ஆபீஸ் மேல் இருந்த முழு அக்கறையும்  போக்க செய்து மார்ச் 1 கத்தாரில்; பணியில் சேரப்போகிறேன் என்று கூறியிருந்த நீங்கள் மேலுலகமே சென்று விட்டீர்கள்.   நீங்கள் இருக்கும் போது 10 லட்சம் தாரேன் விடுதலை பத்திரத்தில் கை எழுத்து போடுகின்றாயா என கேட்டு கொண்டிருந்தனர்.   

பாபு அத்தான் நான் இப்போது கேட்பது உங்கள் தம்பிக்காக எடுத்து  கொடுத்த கடனை திருப்பி அடைக்க கூறுங்கள். தாய் , தம்பி பாசத்திற்கு என ஏங்கிய நீங்கள் பணத்தை கொடுத்தாவது  உங்கள் அன்பை மீட்க பார்த்தீர்களோ?  நீங்கள் கத்தார் சென்றால் உங்கள் அலுவலகத்தில் இருந்து 10 ஆயிரம் வரும் என்றீர்கள். பத்து பைசா உங்க உதவியாளர்களால் எனக்கு தர இயலவில்லை. அலுவலகத்தை இழுத்து பூட்டி விட்டனர். அத்தான் விபத்து நம் வாழ்க்கையை மாற்றி மறித்து போய் விட்டது. நான் கலங்குவது: உங்கள் பிரிவு இன்னொன்று உங்க சிந்தனையற்ற செயல்கள் அதை தொடர்ந்து நான் பொறுப்பு ஏற்க வேண்டி வந்த உங்க கடன்கள். எனக்கு உங்களிடம் கோபம் இல்லை வருத்தமும் இல்லை  ஐந்து  லட்சத்தை கொடுத்து தாய் பாசத்தை வாங்கி விட்டு எனக்கும் உங்கள் மகன்களுக்கும் உங்கள் நினைவுகளை தந்து கிளம்பி  விட்டீர்கள். சாம் இன்று விடுமுறை ஆரம்பமாகி விட்டது. உங்கள் நினைவால் மிகவும் சோற்வுற்று  அவன் காலையில் இருந்து மாலை வரை ஒன்றும் சாப்பிடவில்லை. உங்கள் மகன்கள் இனி வளர வேண்டுமென்றால் உங்களை நினைத்து அழுது புரள்வதை நான் நிறுத்த வேண்டும். உங்கள் வசம் தான் நல்ல யுக்திகள் வைத்திருப்பீர்களே. எங்களுக்கு வாழ வழி காட்டுங்கள். 

பெண்களை அதும் மனைவிகளை குறை கூறவே இந்த சமூகம் துணியும். அன்பின் பெயராலும் நேசத்தின் பெயராலும் ஏமாற்றப்படுவது பெண்களே. உங்க  அம்மா கூட உங்க சித்தியிடம் சொல்லி விட்டுள்ளார். பொம்மை மாதிரி இருந்து கொண்டு நல்ல ஊர் சுற்றியுள்ளாள். இனி நல்ல அனுபவிக்கட்டும் என்று. நான் எதையும் கண்டு கொள்ளும் மனநிலையில் தற்போது இல்லை. எனக்கு கிடைத்த பல அறிவுரைகள் தான் என்னை அழ வைத்தது. நான் நானாக இருப்பேன். உங்கள் ஆசை போல் உங்கள் எண்ணம் போல் வாழுவேன்.   காதல் குருடு என்பது போல் நாம் மற்றவர்களிடம் வைக்கும் நம்பிக்கையும் ஓர் வகை குருட்டு போக்கு தான் பெற்றோர்கள் மேல் பெற்ற தாய் மேல் வைத்த உங்கள் நம்பிக்கை  உங்களுக்கு சொர்க வாசலை திறந்து விட்டுள்ளது என நினைக்கின்றேன். யார் யாருக்கோ என்ன என்னமோ செய்தீகள். உங்க பிள்ளைகள் உங்களை நினைத்து ஏங்குவது தான் என்னால் சகித்து கொள்ள இயலவில்லை. உங்கள் மேலுள்ள நம்பிக்கை  வீணாகாத வண்ணம் நான் வளர்க்க வேண்டும் என்பது தான் உங்கள் விருப்பமாக இருக்கும் அத்தான் உங்க சக்தியை உங்க அன்பை உங்க கரிசனையை எங்களிடம் திருப்புங்கள். இனி உங்களுக்காக வாழ்ந்த வாழ்க்கையை நம் மகன்களுக்காக வாழ உள்ளேன். சாம் நொடிந்து விட்டான். கனவிலாவாது வந்து அவனிடம் கதையுங்கள். 

5 comments:

  1. Palaniappan Kandaswamy · Chief at At HomeApril 03, 2016 7:54 am


    உங்கள் கணவரின் பிரிவுச்செய்தியை அறிந்து மனம் வருந்துகிறேன். இந்த த் துயரைத் தாங்கிக்கொள்ளும் மனோபலத்தை கர்த்தர் அருள்வாராக.

    ReplyDelete
  2. You have console yourself and for your kids fast it is difficult but you have to come out fast for them.

    Pl do not expose your family problem on public forum. You are not going to achieve anything by this way instead of sharing the secrets to common.

    Like Buddha word birth and death are cannot neglect we have face it

    ReplyDelete
  3. R Narumpu Nathan · Gvn college kovilpattiApril 03, 2016 10:54 pm


    கனவிலாவது அவனிடம் வந்து கதையுங்கள்...என்பது வரியல்ல..வலி..தாங்க முடியாத வலி.
    மீண்டு வாருங்கள் ஜோசெப்பின்

    ReplyDelete
  4. நேற்று (3/4/2016) நண்பகல் லயோலா கல்லூரி வளாகத்துக்குள் ஒரு கவிதைவெளியீட்டு விழாவுக்காகச் சென்றிருந்தேன். ரயில் நிலையத்திலிருந்து இறங்கியதும் அருகாமை கேட் வழியாக ஊடகத் துறை அருகே நடந்து சென்றபோது அவ்விடத்தைப் பார்க்கவே இயலாது முகத்தைக் கவிழ்ந்துகொண்டேன். ஜோ அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது 2 ஆண்டு முன்பாக அங்கு சந்தித்திருக்கிறேன். ஜோ வாழ்வில் புதிதாக உற்சாகமும் நம்பிக்கையும் பூக்கத் தொடங்கிய காலம் அது. வீட்டுக்கு அழைத்தபோது அத்தானுடன் வருவதாகக் கூறியது நிறைவேறவே இல்லை ஜோ.
    வாழ்க்கை பல மர்ம முடிச்சுகளை போட்டு அவிழ்த்துக் கொண்டே இருக்கிறது!... யாருக்கும் விதிவிலக்கு இல்லை

    ReplyDelete
  5. எழுத்தில் வடித்தால் துயர் தீராது. உங்கள் கடமை உங்களின் துயரங்களை அடக்கம் செய்து உங்கள் பிள்ளைகளுக்காக தைரியமான முகத்தைக் காண்பியுங்கள். பிறருக்கு அளித்தல் என்பது தனக்குத் தானே சேமித்துக்கொள்வது போன்றது. அதை வெளியில் சொல்வது சேமிப்பைச் செலவழிப்பது போன்றது. உங்கள் மனம் அமைதியடையட்டும். எந்த இரவும் விடியும். எந்தப் பகலுக்கும் இரவு உண்டு.

    ReplyDelete