3 Apr 2016

என் கதைப்புகள் !

உங்களை கல்லறைக்கு அனுப்பும் மட்டும் உங்கள் அம்மா பண ஆசை ஓய்ந்த பாடில்லை. ஒரு வகையில் நீங்க நிம்மதியாக இறைவன் சன்னதியை அடைந்து விட்டீர்கள் என்று தான் தோன்றுகின்றது. உங்கள் ஏக்கம்  உங்க குடும்ப பாசத்தை குறித்தே இருந்தது. நானும் எவ்வளவோ உங்களுக்கு சொல்லி பார்த்து விட்டேன் பாபா அத்தான்.  உங்களுக்கு சொந்த வீடு உண்டு உங்களுக்கு என பிழைப்பு உண்டு உங்களுக்கு அருமையான மகன்கள் உண்டு உங்களை எப்போது நினைத்து கொண்டிருக்கு நான் உண்டு. இருந்தும் உங்க தாய் பாசம் -ஏக்கம் வலிமையானது. ஏன் என்னை ஒதுக்கி விட்டனர் ஏன் என்னை மதிப்பதில்லை என வருந்தி  கொண்டே இருந்தீர்கள்.


ஒரு பிள்ளை முதன்முதலாக மதிக்கப்பட வேண்டியது அதன் குடும்பத்தில் தான். ஆனால் உங்கள் தாய் உங்களை ஒன்றரை வயதிலே உங்க பாட்டி  வீட்டில் கொண்டு  விட்டது பெரும் வடுவை உருவாக்கி விட்டது, ஓர் ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டது உங்களுக்கு.. அங்கிருந்த அத்தை, அம்மா பாட்டி வளர்ப்பிலே வளர்க்கப்பட்டவர் நீங்கள்.   தனக்கு மாமா பெரியப்பா போன்ற உறவுகள் வேண்டும் என ஏங்கினீர்கள். ஆனால் உங்க தம்பியை நாலு வயதினிலே விடுதியில்  விட்டதால் பாசத்தை விட மனிதர்களிடம் வெறுப்பு பொறாமையை   மேலோங்கி இருந்தது.


உங்கள் குடும்பம் என்றால் பெரியதும், வலியது என நம்பினீர்கள். அத்தான் இந்த குணம் தான் உங்களை வளர விடாது தடுத்தது என நான் நினைக்கின்றேன்.  ஆனால்  உங்களை தூக்க ஒரு உறவினர்கள் கூட அருகில் இல்லை. உங்களை உண்மையில் நேசித்தது உங்க நண்பர்களாக தான் இருக்க வேண்டும். உங்களை தூக்கினதும் உங்க நண்பர்கள், என் மாணவர்கள் சாம் நண்பர்கள். உங்க உடன் பிறந்த தம்பி கூட விபத்தில் நீங்கள் இறந்து விட்டீர்கள் என அறிந்த பின்பும் வந்து சேர தாமதித்துள்ளான்   நீங்கள் ஏற்பாடு செய்து கொடுத்து செந்திலுடன் வியாபாரம் பேசி கொண்டு இருந்துள்ளான். உங்க தம்பி திருமணம் அன்று செருப்பு தூக்க என்னிடம் கொடுத்தது போல் இன்றும் செருப்பாக நடத்துகின்றனர். என்னை கேலி பேசுவது என்னை விமர்சிப்பது எல்லாம் என் காதுக்கு எட்ட வைக்கின்றனர். நீங்க இருந்திருந்தால் உங்களிடம் எல்லாம் கதைத்திருப்பேன். இன்று என் வலைப்பதிவு வழியாக உங்களிடம் சேர்க்கின்றேன். 

அத்தான்  நான் நினைவில் குறித்து வைத்தவை எல்லாம் நீங்கள் டயறியில் குறித்து வைத்திருந்தீர்கள்.  நாம் தூத்துக்குடி நெல்லைக்கு வந்து குடியேறினதே மிகப்பெரிய தவறு. ஆனால் அந்த தவறை பற்றி 15 வருடம் முன்பே கூறியிருந்தேன். நீங்க வேலை தேடி எஸ்டேடில் இருந்து வெளியேற வேண்டும் என நினைத்த போதே நான் குறிப்பிட்டிருந்தேன். நாம் கோயம்பத்தூர் செல்லலாம் என்று. உங்க குடும்ப ஆட்கள் தொல்லை வேண்டாம் நாம் இக்கட்டான சூழலில் இருப்பதை அவர்கள் காணக்கூடாது என்று மட்டுமே நான் விரும்பினேன். ஆனால் நீங்களோ தூத்துக்குடி திருநெல்வேலி என்றால் உங்கள் வீட்டில் இருக்கலாம் என்று கனவு கண்டீர்கள்.  அந்த கனவு இருந்ததால் தான் உங்க அம்மா அப்பா கட்டின புது வீட்டின் பக்கத்தில் இருந்த பழைய  மண் வீட்டை உங்களுக்கு தரக் கூறினீர்கள். அதற்கு தான் உங்க அப்பா உங்க தம்பி திருமணம் நாள் அன்று நம்மை திட்டி விரட்டி விட்டார். பொதுவாக மௌனம் காக்கும் நீங்கள் அன்று என் பெற்றோர் இருந்ததால் மிகவும் அவமானத்திற்கு உள்ளாகி கத்தி அழுது ஆற்பாட்டம் செய்து   உங்க வீட்டை விட்டு அவமானப்பட்டு வந்தீர்கள்.  அன்றைய உங்க துயரை  போக்க என என் நகைகளை வலுக்கட்டாயமாக உங்களிடம்  கொடுத்து உடன் இடம் வாங்குங்கள் நாமும் வீடு கட்டலாம் என்றேன். அது போலவே நாமும் நம் சக்திக்கு இணங்க அழகான ஓர் வீடு கட்டினோம் அந்த வீட்டில் ஒன்பது வருடமாக இருந்தோம்.


உங்க வீட்டிற்கு தறை கல் இட்ட போதோ உங்க தம்பிக்கு பெண் பார்க்கவோ உங்க தம்பிக்கு குழந்தை பிறந்த போது உங்களை அழைக்கவோ இல்லை. உங்க துயரை கண்டு நான் உங்க அம்மாவிடம் தொலைபேசியில் வினைவிய போது  நீங்க தனியார் நிறுவனத்தால் வேலை பார்ப்பதால் லீவ் கிடைக்காது என நினைத்தோம் என்றார். 

தூத்துக்குடியில்  கில்பர் அத்தான் வீட்டு மாடியில் குடியிருந்த போது நம்மை சந்திக்க வந்த உங்க பெற்றோர் உங்களையும் என்னையும் மிகவும் அவமரியாதையாக கேலியாக  பேசின  போது  உங்களுக்கு தெரியாது  உங்க அப்பாவுக்கு  நான் ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தேன். அந்த கடிதத்தை உங்க அப்பா உங்களிடம் வாசித்து காட்டவும் எனக்கு தெரியாது உங்க மருமகள் எழுதியுள்ளாள் என்று கூறி தப்பித்து வந்து நான் எழுதினதை என்னிடம் பாராட்டினீர்கள்.  அந்த கடிதத்தில் என் மாமனாரிடம் நான் வேண்டி கொண்டது உங்க மகனை மகனாக நடத்துங்கள் கேவலப்படுத்தாதீர்கள். உங்கள் மகன் தோல்விக்கு நீங்களும் தான் காரணம் என்று எழுதியிருந்தேன். அதன் பின் நம் விடையத்தை பேசுவதை நிறுத்தி விட்டு நம்மை ஒதுக்கினர்.

அத்தான் இதுவெல்லாம் பொதுத்தளத்தில் பதிய வேண்டிய விடையமல்ல. ஆனால் உங்கள் உழைப்பு, உங்கள் ஆசைகள் எல்லாம் அகாலத்தில் பொலிந்து விட்டதே. இன்று உங்கள் அன்பைக்கூட நினையாது ஒதுக்குகினர். உங்களுக்கு ஒருவேளை புதியதாக இருக்கலாம். நீங்க இல்லாவிடில் நான் சந்திக்க வேண்டிய துயர் எனக்கு தெரியும். ஆனால் நீங்கள் இல்லாத போது உங்களை மறுபடியும் அவர்கள் அவமதிப்பதை என்னால் தாங்கி கொள்ள இயலவில்லை. இவை எல்லாம் உண்மையான மனிதர்களின் வரலாறு. இதில் கற்பனையில்லை பொய்மை இல்லை. ஒவ்வொரு பெண்ணும் அன்பு இல்லாத குடும்பங்களில் எதிர் கொள்ள வேண்டிய பிரச்சினைகள் என புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு கணவனும் தான் உயிருடன் இருக்கும் போது என்பது போலவே, தன் காலம் பின்பும் தன் மனைவியின் நிலை என்ன என்று புரிந்து அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். எனக்கு அத்தான் அளித்த கல்வி உதவியுள்ளது. நான் அத்தான் மதிப்பிற்காக படித்தேன் ஆனால் அத்தான் பணம் சார்ந்து எடுத்த முடிவுகள் அவர்கள் தாய் சகோதரனை நம்பி எடுத்த முடிவுகள் என்னையும் எங்கள் மகன்களையும் நடுத்தெருவில் கொண்டு வந்திருக்கும். என்னிடம் யார் கதைப்பதையும் நான் விரும்பவில்லை அத்தான் உங்கள் அன்பால் மட்டுமே எனக்கு ஆறுதல் தர இயலும்.




0 Comments:

Post a Comment