8 Jun 2016

பள்ளிக்கூட நினைவுகள்!

 சில பழைய படங்களை கண்ட போது நினைவுகளும் தானே ஓடி வருகின்றது. நாங்கள் அரசு இடைநிலைப்பள்ளியில் படிக்கும் போது நடந்த ஒரு சம்பவம் நினைவை சூழ்கின்றது. நாங்கள் மாணவிகள் செல்லும் போது உயர்நிலை மாணவர்கள் வழி மறித்து கலாட்டா செய்யும் வழக்கம் இருந்தது. மாணவிகள் அலறி சிதறி ஓடுவதில் அந்த விடலை பசங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி!
ஆனால் எங்கள் குழு சொல்லி வைத்து, அந்த பசங்க எங்கள் அருகில் சீண்ட வந்ததும் எடுத்து வைத்திருந்த சேப்டி பின்(ஊக்கு) வைத்து கிழித்து விட்டோம். இந்த செய்தி எங்கள் ஆசிரியர்கள் காதில் விழ எங்களிடம் விசாரித்து விட்டு உயர் நிலைபள்ளிக்கு தெரிவித்தனர். எங்கள் வீரத்தை ஆசிரியர்கள் பாராட்டினாலும் ஆசிரியர்களிடம் தெரிவிக்காமல் இருந்தமைக்கு கடிந்து கொண்டனர். அந்த வருடம் நான் பள்ளி தலைவராக இருந்ததால் என் பொறுப்பற்றதனத்தையும் கண்டித்தனர்.
அந்த பள்ளியில் அந்த மாணவர்கள் தண்டனை என்ற வண்ணம் ஒரு வாரம் நீக்க அவர்கள் பெற்றோர்கள் எங்கள் வீடு தேடி சமரசம் பேசி வந்தனர். அந்த மாணவர்களோ நாங்கள் காம்பஸை எடுத்து குத்த வந்தோம் என புளுவி விட்டனர். பின்பு எங்கள் குழுவிற்கு காம்பஸ் என்ற அடைமொழி கிடைத்தது.
உயர்நிலை பள்ளிக்கு அம்மாவுடன் சேர சென்ற போது பள்ளி முதன்மை ஆசிரியை என்னை கண்டதுமே நீ தான் மாணவர்களை காம்பஸ் எடுத்து குத்த முயன்றாயோ? என்று கேள்வியுடன் அவர் கண்ணிலுள்ள முள்ளாகவே பின் வந்த மூன்று வருடத்திலும் என்னை பராமரித்து வந்தார். பின்பு வாய் நோக்கும் மாணவர்களை மாணவிகள் இட்டலி வைத்து எறிந்தால் கூட அதன் பின்புள்ள மூளை நானாக இருக்க வேண்டும் என தலைமை ஆசிரியை நினைத்து என்னையும் ஓர் குற்றவாளி போன்று விசாரித்து கொள்ளுவார். நம்ம ஊர் போலிஸிடம் மாட்டும் திருடாத கள்ளன் போல் தன் என் நிலை இருந்தது. அப்படி பள்ளிக்காலத்தில் காம்பஸ் , இட்டலி என பல கலாய்ப்புக்கு உள்ளாகியுள்ளோம். இப்போது உள்ள பெற்றோர் போல் பிள்ளைகள் விடையத்தில் பெரியவர்கள் தலையிட மாட்டார்கள், பெண்களும் இன்றைய பெண் பிள்ளைகளை போல அழுவாச்சிகள் அல்லாது வீர சூரமாக இருந்தோம்.
அன்று எங்களுடன் படித்த மாணவர்களை எல்லாம் இன்று அடையாளம் கண்டு பிடிப்பதே கடினமாகி விட்டது. மீசை தாடி என புது உருவத்தில் உள்ளனர் . இருப்பினும் அந்த பள்ளிக்கால நேசம், பாசம், மரியாதை என்றும் மறையாது இருப்பது அக்காலத்தின் அழகாகும்.

0 Comments:

Post a Comment